பழைய வங்கிக் கணக்கில் பணம் மறந்து போய்விட்டதா? கவலை வேண்டாம்... அதை மீண்டும் பெறலாம்! RBI-ன் சூப்பர் திட்டம்.


புதுடெல்லி, ஜூலை 4:


10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக செயல்படாமல் உள்ள வங்கிக் கணக்குகள் மற்றும் கோரப்படாத வைப்புத் தொகைகளை, பொதுமக்கள் எளிதாகக் கண்டறிந்து மீண்டும் பெற்றுக்கொள்ளும் வசதியை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஏற்படுத்தியுள்ளது.


வங்கிக் கணக்குகள், நிலையான வைப்பு (Fixed Deposit), முதிர்வடைந்த வைப்பு உள்ளிட்ட தொகைகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாடின்றி அல்லது கோரப்படாமல் இருந்தால், அந்தத் தொகைகள் வங்கிகளால் ரிசர்வ் வங்கியின் Depositor Education and Awareness (DEA) Fund-க்கு மாற்றப்படுகின்றன. இருப்பினும், அந்தப் பணம் அரசுக்குச் சொந்தமாகிவிடாது. கணக்கு வைத்திருப்பவர், நியமிக்கப்பட்டவர் (Nominee) அல்லது சட்டப்பூர்வ வாரிசுகள் எப்போது வேண்டுமானாலும் அந்தத் தொகையை கோரிப் பெறலாம்.


இந்தத் தொகைகளைத் தேடுவதற்காக, UDGAM (Unclaimed Deposits – Gateway to Access Information) என்ற இணையதளத்தை ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது. இந்த தளத்தில் பதிவு செய்து, பெயர், வங்கியின் பெயர் மற்றும் தேவையான அடையாள விவரங்களைப் பயன்படுத்தி, பல்வேறு வங்கிகளில் உள்ள கோரப்படாத வைப்புத் தொகைகளை ஒரே இடத்தில் தேடிப் பார்க்க முடியும்.


UDGAM தளத்தில் தொகை இருப்பது உறுதியான பிறகு, சம்பந்தப்பட்ட வங்கியின் கிளையை நேரடியாக அணுகி, ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட செல்லுபடியாகும் KYC ஆவணங்களைச் சமர்ப்பித்து, வங்கியின் நடைமுறைகளின்படி தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். UDGAM தளம் தேடல் வசதியை மட்டுமே வழங்குகிறது; பணம் வழங்குவது சம்பந்தப்பட்ட வங்கியே ஆகும்.


பழைய வங்கிக் கணக்குகள், குடும்ப உறுப்பினர்களின் செயல்படாத கணக்குகள் அல்லது மறந்து போன வைப்புத் தொகைகள் இருந்தால், அவற்றை உடனடியாகச் சரிபார்த்து உரிய நடைமுறைகளைப் பின்பற்றி மீட்டுக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

Post a Comment

0Comments
Post a Comment (0)