பெண்களுக்கு கல்யாணம் முடிந்தால், எல்லாமே முடிந்து விட்டதா? | திருமதி. இராஜதிலகம் பாலாஜி


நான் நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்ற நினைத்தது தான் இந்த தலைப்பு, "பெண்களுக்கு கல்யாணம் முடிந்தால், எல்லாமே முடிந்து விட்டதா?" ஒரு பெண், திருமணத்திற்கு முன்பு தன் எதிர்கால வாழ்க்கையைக் குறித்து மனதிற்குள் பல கற்பனை கோட்டைகளைக் கட்டி, தன் இலட்சியத்தைக் குறித்த பலவிதமான கனவுகளோடு ஆசைகளை வளர்த்துக் கொண்டு வளருகிறாள்.


பருவ வயது எய்தியதும் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்ததும், பல பெண்களின் வாழ்க்கை சூழ்நிலைகள், அவர்களுடைய ஆசைகளையும், கனவுகளையும் மேற்கொண்டு நிறைவேற்ற முடியாத அல்லது தொடர முடியாத நிலைக்கு உள்ளாகிறது.


கடந்த ஆறுமாத காலமாக நான் ஒரு யோகா வகுப்பில் சேர்ந்து யோகா கற்றுக் கொண்டு வருகிறேன். சமீபத்தில் அந்த வகுப்பில் நோவா வேர்ல்டு ரெகார்டு போட்டி ஒன்று நடத்தினார்கள். அதில் நானும் கலந்து கொண்டேன். என்னை விட பல திறமையான பெண்களும் அந்த வகுப்பில் இருக்கிறார்கள்.


அவர்களெல்லாம் ஏன் சேரவில்லை  என்று யோகா கற்றுத் தரும் குருவிடம் வினவினேன். அவர் கூறிய பதிலைக் கேட்டு கொஞ்சம் மனம் சங்கடமடைந்தேன். ஒவ்வொருவரின் குடும்பச் சூழ்நிலையே இதற்குக் காரணம். சிலருடைய குடும்பத்தில் யோகா வகுப்பிற்கு செல்வதையே, கல்யாணம் முடிந்த பிறகு இதெல்லாம் உனக்கு எதற்கு என்ற கேள்விகள் பல வருவதாகவும், வேறு வழியில்லாமல் சிலர் எப்படியோ சமாளித்து வருகிறார்கள் என்று கூறினார்.


ஒரு சிலர் என்னிடமும் கேட்டார்கள். யோகா வகுப்பிற்கு செல்கிறாய் சரி, இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமென்ன என்று? என்னுடைய மனதிருப்திக்கும், என்னாலும் எல்லா ஆசனங்கள் செய்ய முடிகிறாதா என்று என்னை நானே பரீட்சித்து பார்ப்பதற்கும், அதோடு மட்டுமில்லாமல் ஒரு பெண் நினைத்தால் எந்த வயதிலும் எதையும் செய்ய முடியும் என்று பிற்காலத்தில் என் குழந்தைக்கு நம்பிக்கையூட்டி வளர்ப்பதற்குமே சேர்ந்தேன் என்று பதில் கூறினேன்.


நான் படித்த பிறகு சில காரணங்களால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. இருந்த போதிலும் நான் எனக்கான அடையாளத்தை நோக்கித் தேடி ஓடவும், எனக்கான அடையாளத்தைக் கண்டறிந்து அதில் முத்திரை பதிக்காமல் இவ்வுலகை விட்டு விடைபெறக் கூடாது என்று வைராக்கியத்தோடு ஓடிக் கொண்டிருப்பவள் தான் நான்.


கடந்த கால வாய்ப்புகளை சூழ்நிலையால் தவறவிட்டாலும், இனிவரும் வாய்ப்பை ஒருபோதும் தவற விடக் கூடாது என்று எண்ணத்தில் ஆழமாக விதைத்திருக்கிறேன். பெண்கள் என்றாலே, அவர்களுக்கு படிப்பு எதற்கு? நாளை பாத்திரம் தானே தேய்க்கப் போகிறாள்... என்று நம்மை மட்டம் தட்டி, மேலும் வளர விடாமல் தடுப்பதற்கென பலர் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் உலகமிது.


ஆம் தோழிகளே! பெண் குழந்தைகள் பெற்ற நம் அனைவருக்கும் மிகப் பெரிய பொறுப்பிருக்கிறது. நம் குழந்தைகளும் நம்மைப் பார்த்து தான் வளருகிறார்கள். இந்தச் சமூகத்தில் ஒரு பெண் குழந்தையை வளர்க்கும் விதமும், ஆண் குழந்தையை வளர்க்கும் விதமும் சில வீடுகளில் வித்தியாசமாக இருக்கிறது என்றும், பெண் குழந்தை என்றாலே திருமண வாழ்க்கைக்கு மட்டும் தான் அவர்களை தயார் செய்வது போலவும், பெண் குழந்தைகளின் வளர்ப்பு முறையில் சில கட்டுபாடுகளும் தடைகளும் விதிக்கப்படுவதாக, சில நாட்களுக்கு முன்பு எழுத்தாளர் கீதா இளங்கோவன் அவர்களது பேட்டியைப் பார்த்து தெரிந்து கொண்டேன்.


அவர் பள்ளி ஒன்றிற்குச் சென்று குழந்தைகளிடம் பேச வாய்ப்பு கிடைத்ததையும், அம்மாணவர்கள் கூறும் கருத்தை தன்னுடைய பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்ததைக் கேட்டு எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. மறுபக்கம் இந்த காலத்திலும் கூடவா இப்படியெல்லாம் நடக்கிறது என்று எனக்கு வியப்பாகவும் இருந்தது.


இன்று பெண்களைப் பெரிதாக மதித்து போற்றுபவர்களும், அவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்று அவர்களுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க ஒரு கூட்டம்  ஒரு புறம் இருந்தாலும், அவர்களது வளர்ச்சியை தடை செய்து முன்னேற விடாமல் செய்வதற்கென்று மற்றொரு கூட்டமும் நம்மைச் சுற்றி இன்றும் இருக்கத்தான் செய்கிறது என்பது தான் மறுக்கப்பட முடியாத உண்மை தோழிகளே.


எது எப்படி இருந்தாலும் சரி தோழிகளே, கல்யாணம் முடிந்தால் எல்லாம் முடிந்தது என்று சோர்ந்து அமைதியாகி விடாதீர்கள். நமக்காவும் நாம் வாழ வேண்டும். இங்கு அனைவரும் அவரவர் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் மனநிறைவுடன் வாழ்வற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறோம்.


நமக்கு கிடைத்திருக்கும் இந்தவொரு அழகான வாழ்க்கையில் நமக்கென்ற ஒரு தனித்த அடையாளத்துடன் வாழ்ந்து, நம் தலைமுறைகளுக்கு நாம் ஒரு முன் மாதிரியாக இருப்பது மிகவும் முக்கியம் தோழிகளே! நம் இலக்கை அடைய பல தடைகள் வருவது இயல்பே. சரித்திரம் படைத்த அனைத்து வீராங்கனைகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் புரட்டிப் பார்த்தால் ஒரு விஷயம் நன்கு புலப்படும். சரித்திரம் படைக்க வேண்டுமென்றால் பல சமுத்திரங்களையும், சோதனைகளையும் கடந்து வர வேண்டியதிருக்கும்.


வாய்ப்புகளுக்காக காத்திருக்காதீர்கள் தோழிகளே! வாய்ப்புகளை நீங்களே உருவாக்கி முன்னேறிச் செல்லுங்கள். இப்பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்களும் ஒவ்வொரு நோக்கத்துடனே படைக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்து துணிந்து நடைப்போட பழகுங்கள்.


- திருமதி.இராஜதிலகம் பாலாஜி M.Tech, எழுத்தாளர், புடாபெஸ்ட், ஹங்கேரி

Post a Comment

4Comments
 1. உண்மை தான் சகோதரி . அருமையான பதிவு

  ReplyDelete
 2. அருமை டா. மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. மிகவும் அருமையான பதிவு சகோதரி 💐💐🤝

  ReplyDelete
Post a Comment