வெற்றிக்கு வித்தாகும் நம்பிக்கை!! | அ.ரோஸ்லின்

Image credit: google.com


மனித வாழ்வென்பது கடலைப் போன்ற பரந்ததும் ஆச்சரியங்களும். கேள்விகளும் சூழ்ந்ததும் ஆகும், கடலில் பயணிப்பதான அனுபவங்களைத் தரக்கூடிய மனித வாழ்வில் ஒவ்வொரு அடுத்த அடியும் முயற்சியும் கலங்கரை விளக்கமாய்ச் கடரும் மன வலிமையின் பாற்பட்டதே.


லட்சியமற்ற வாழ்க்கை உப்பற்ற உணவு போன்றது. லட்சியம் தன்னம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது தன்னம்பிக்கை வெற்றியைக் கையளிக்கிறது. இதையே வள்ளுவர்,

எண்ணிய எண்ணி யாங்கு எண்ணியார் 

திண்ணியர் ஆகப் பெறின். - என்று கூறுகிறார்.


விதைக்குள் விருட்சம் இருப்பது உண்மைதான். ஆனாலும் அந்த விதை முளைத்து காற்றின் வேகத்தையும் ஒளியின் வலிமையையும் வெப்பத்தின் போராட்டத்தையும் உள்வாங்கி தனது இயற்கையின் போரினை ஏற்று வளர வேண்டும். அதுவே தன்னம்பிக்கை ஆகிறது. தன்னம்பிக்கை தெளிவான சிந்தனையையும், திட்டமிட்ட உழைப்பையும் தரும். 


தன்னம்பிக்கை என்பது நமக்குள் இருக்கும் ஊக்கமே. உடையர் எனப்படுவது ஊக்கம்அஃது - இல்லார் உடையது உடையரோ மற்று. ஊக்கமே ஒருவருக்குச் சொத்தாகும். அது இல்லாதவர் பிறவற்றைக் கொண்டிருந்தாலும் சொத்துடையார் என்று வழங்கப்பட மாட்டார் என்று வள்ளுவம் கூறுவது தன்னம்பிக்கையையே. இன்பம் பொங்கும் மனதில் துயர் தங்குவதில்லை, களிப்பினைத் தேக்கி வைக்கும் நிலமாக மனம் எப்போதும் காணப்படவேண்டும். பிறப்பால் உயர்வு தாழ்வற்ற வாழ்வில் அதை நிர்ணயிப்பது எதுவாக இருக்கிறது. 


அன்பும் ஆனந்தமும் வழிந்து செல்லும் வாழ்வானது எங்கு தேங்கி நிற்கிறது. பொருளாதாரமின்மையோ உடல் குறைபாடோ எது நம்மை முடக்கிட இயலும். முடமாகாத மனங்களில் நிறைந்திருக்கும் நம்பிக்கையின் சிறு பொறி இவ்வுலகத்தை உனக்குள் கொண்டு வந்து சேர்ப்பிக்கும் மனம் என்பது தினந்தோறும் புதிய புதிய பூக்கள் மலரும் மலர்த்தோட்டம் முயற்சியின் தளிர்கள் துளிர்க்கும் பசும் வனம். நம்பிக்கையெனும் வற்றா ஊற்றின் விளைநிலம்.


நம்பிக்கையைக் கண்டறி.

உள்ளம் சோர்ந்து போகும் தருணங்கள் உதவியற்ற கணங்கள், முயற்சி தடையாகி மறிக்கும் நேரங்கள். அனைத்துப் பாதைகளும் அடைபட்டு வழியற்று விழிகளில் கண்ணீர் மறைக்கும் போது உள்ளிருக்கும் சிறு சுடரை உணர்வோம்.


இவை இல்லாமலும், ஒவ்வொரு நாளினையும் நம்பிக்கையின் துடுப்பில் சுடந்தபடி இருக்கும் மனிதர்கள் எத்தனை எத்தனை. ஏழ்மையிலும், குறைபாட்டிலும் வீழ்ச்சியிலும், முன்னேற்றத்திலும், ஏமாற்றத்திலும், நம்பிக்கையை வென்றெடுப்போர் அன்றாட வாழ்வின் பக்கங்களை வெற்றியால் அலங்கரிக்கின்றனர்.

எண்ணிய முடிதல் வேண்டும், 

நல்லவே எண்ணல் வேண்டும்; 

திண்ணிய நெஞ்சம் வேண்டும், 

தெறிந்தநல் லறிவு வேண்டும்;

பண்ணிய பாவ மெல்லாம்

பரிதி முன் பனியே போல,

நண்ணிய நின்முன் இங்கு

நசித்திடல் வேண்டும் அன்னாய்!

என்று பாரதி தனது தெய்வப் பாடல் கொண்டு, அன்னையின் வழியாக திண்ணிய நெஞ்சத்தையும், தெளிந்த நல்லறிவையும் வேண்டுகிறார். 


நலிவினை நன்மையாக்கும் நம்பிக்கை.

நம் நாட்டின் மிகப்பெரும் தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள் உயர் அதிகாரிகள் பலரும் எளிய நிலையிலிருந்தே இத்தகைய உயர்வினைப் பெற்றுள்ளனர் என்பதும் அவர்களின் வாழ்வின் திருப்பங்களும் நன்மைகளும் கைகளில் வந்து சேர, அவர்கள் உள்ளங்களில் குடிபுகுந்த நம்பிக்கையே காரணமன்றி வேறில்லை.


சாதனை புரிவதற்கு கடுமையான உழைப்பும் உழைப்பின் மீதான உன்னத நிலைப்பாடுமே காரணமாகிறது. இளைஞர்களின் விடிவெள்ளி அணு நாயகர் அப்துல் கலாம் அவர்களின் கடின உழைப்பே, குடும்பத்திற்காக செய்தித்தாள் விநியோகம் செய்த அவரின் உள் கனன்று கொண்டிருந்த நம்பிக்கை நெருப்பு அவரை இராமேஸ்வரத்தில் இருந்து இந்தியாவின் முதல் குடிமகனாக்கியது.


நம்பிக்கைச்சிகரங்கள்.

தனது சகோதர சகோதரிகளுக்குத் தேவைப்படும் என்று தனக்கு வழங்கப்படும் அனைத்துப் பொருட்களையும் கவனத்துடன் பயன்படுத்துவான் அச்சிறுவன். அவன் தந்தை பெறும் 120 ரூபாய் சம்பளத்தில் பிள்ளைகளுக்கு ஆளுக்கொரு புத்தகம், பென்சில் என வாங்கித் தர முடியாத நிலை .ஏழை ஆசிரியர் தன் வருமானக் குறைவை சரிசெய்ய எந்த தொழிலும் அவமானமில்லை எனக் கருதி தையல் தொழில் செய்வார். 


அச்சிறுவனும் தன் தந்தைக்கு உதவியாக பட்டன் கட்டித்தந்து அவர் அதற்குப் பரிசாக தரும் பைசாக்களைச் சேர்த்து வைத்து 5 ருபாய் முதலீட்டில் கோழிக்குஞ்சுகளை வாங்கி பண்ணை அமைக்க விரும்பி அதனைச் செயல்படுத்தினான் தனது ஏழாவது வயதில் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.


அவர் யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா, சிறு வயதிலேயே இவர் கற்ற சிக்கனம்தான் நாசாவால் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மாவென் செயற்கைகோளின் செலவில், பத்தில் ஒரு பகுதி கொண்டு இஸ்ரோ மூலம் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட சந்திராயன் தயாரிக்க உந்து சக்தியானது. இவ்வளவு குறைந்த செலவில் செயற்கைக்கோள் தயாரித்து அனைத்து நாட்டினரையும் வியப்பில் ஆழ்த்திய பேரறிஞர்தான் மயில்சாமி அண்ணாதுரை. தனது தன்னம்பிக்கைச் சிந்தனையால் நிலவில் தன் பெயரைப் பதித்தார் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்.


உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான பெப்சிகோ வின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் தலைவராகவும் பணியாற்றி வரும் தமிழ்ப்பெண்மணி இந்திரா நூயி தனது கடின உழைப்பின் வழியாகவே இத்தகைய உயர்நிலையினை அடைந்துள்ளார். 


கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது படிப்புச் செலவிற்காக ஒரு நிறுவனத்தில் பார்ட் டைம் ரிசப்ஷனிஸ்டாகப் பணியாற்றிய நூயியின் தற்போதைய ஊதியம், ஒரு நிமிடத்திற்கு பல ஆயிரம் ரூபாய்கள். உலகின் வலிமை மிக்க பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த இந்திரா நூயி, தான் ஓர் பெண்ணாக இருப்பதால் பல தடைகளைத் தாண்டி. ஓர் ஆணை விட இரு மடங்கு உழைத்தே இந்நிலையை அடைந்திருக்கிறேன் என்கிறார். பெண் என்பதன் மீதான நம்பிக்கையே அவரது வெற்றிக்குப் பின் நிற்கிறது.


கார் டிரைவரின் மகளான வான்மதி 2014 ஆம் ஆண்டில் இந்தி ஆட்சிப்பணிக்குத் தேர்வானவர், பள்ளிப் படிப்பை அரசுப்பள்ளியில் முடித்த அவரின் விடா முயற்சியே நம்பிக்கையாயிற்று. தமிழகத்தின் தூத்துக்குடியில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஷிவ் இன்று தகவல் தொழில் நுட்பத் துறையில் மாபெரும் சாதனை படைத்து வரும் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான HCL இன் தலைமைச் செயல் அதிகாரியும், நிறுவனரும் ஆவார்.


சாதாரணமாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஷிவ் இன்று தொழில்நுட்பத் துறையில் மகத்தான பங்களிப்பைச் செய்திருக்கிறார். வாழ்க்கைக்கான தளத்தில் சரியான முடிவுகளை எடுத்து இலக்கினை அடைய HCL நிறுவனர் ஷிவ் கைப்பற்றியது தொழிலின் மீதான நம்பிக்கையே, நம்பிக்கையுள்ள மனிதர்கள் எதற்காகவும் யார். முன்பாகவும் மண்டியிடுவதில்லை மாபெரும் செயல்களைச் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும். என்றால். இன்றியமையாத மூலப்பொருளான வெற்றிக்குத் தேவையான நம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும் என்னும் மொழிகளுக்கு ஏற்ப விடாமுயற்சி, துணிச்சல் கொண்டு தன் கடின உழைப்பால் ரியோ நகரில் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பன். சேலம் மாவட்டம் பெரியவடக்கம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். ஐந்து வயதில் பேருந்து விபத்தில் வலது காலின் பெரும்பகுதி சிதைந்தது.


ஆனாலும் தொடர் பயிற்சியின் காரணமாக 2015 ரியோ பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்று 1.89 மீ உயரம் தாண்டி. தங்கம் வென்ற மாரியப்பன் கால்களில் தனது நம்பிக்கையை பதித்திருந்தார். 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்று தனது நம்பிக்கையை நோக்கித் தன்னைச் செலுத்துகிறார் மாரியப்பன். அண்ணல் அம்பேத்கர், டாடா, மயில்சாமி அண்ணாதுரை, நம்மாழ்வார், இன்னும் இன்னும் தன்னம்பிக்கையைக் கைப்பற்றிய தேவதைகள் உண்டு. எந்தத் துறையில் ஈடுபட்டாலும் உழைப்பு, முயற்சி, நம்பிக்கை கொண்டு வெற்றியை மீட்டெடுத்த சாதனையாளர்களின் சிறு துளியே இது.


ஒவ்வொருவரின் வெற்றியையும் நம்பிக்கையின் கரங்கள் கொண்டு எழுதப்படும். வாழ்க்கை, அதன் நிலையிலிருந்து சரித்திரமாக உருமாறுகிறது. புதிய வரலாற்றினைப் படைக்கும், படைத்துக் கொண்டிருக்கும் உலகின் எண்ணற்ற சாதனையாளர்களின் வெற்றி கீதமாக நம்பிக்கையின் இசை உலகெங்கும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். 

Post a Comment

0Comments
Post a Comment (0)