| Image Credit: www.vettimani.com | |
சாப்பிட ஆரம்பித்த நேரத்தில் உள் அறையில் அன்றைய பாடங்களை எழுதிக் கொண்டிருந்த ஆறு வயது பேத்தி வர்ஷா வெளியே ஓடி வந்தாள். நான் தோசை சாப்பிடுவதைப் பார்த்ததும் ஆர்வமாக என்னிடம் வந்தாள்.
“பாட்டி, தோசையா...? எனக்கு ஒரே ஒரு வாய் கொடுங்களேன்.”
“இல்ல வர்ஷா நீ சாதம் சாப்பிடணும். அம்மா பக்கத்து கடைக்குத் தான் போயிருக்காங்க.
வந்ததும் உனக்கு சாதம் பிசைஞ்சு கொடுப்பாங்க.”
“தெரியும் பாட்டி, நான் சாதம்தான் சாப்பிடுவேன். ஒரே ஒரு வாய் தோசை கொடுங்க.”
“இல்ல கண்ணு, நீ நைட் டிஃபன் சாப்பிடக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு. அப்புறம்
அம்மா வந்தா சத்தம் போடுவாங்க.”
“அதான் அம்மா வீட்ல இல்லையே. ஒரு வாய் தோசை சாப்பிட்டா தப்பில்ல பாட்டி. ப்ளீஸ்...
சரி, நானே பிச்சு எடுத்துக்கறேன்.”
சொல்லிவிட்டு ஒரு துண்டு தோசையை எடுத்து சட்னி தொட்டு வாயில் போட்டுக்கொண்டு, மீண்டும் உள்ளே போகத் திரும்பியவள், “பாட்டி, அம்மாகிட்ட சொல்லிடாதீங்க, சரியா,” என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே போனாள். வர்ஷா உள்ளே போகவும் மருமகள் ரேகா உள்ளே வரவும் சரியாக இருந்தது.
ரேகா எதுவும் சொல்லிவிடக் கூடாதே என்ற பதட்டத்தோடு தலையைக் குனிந்தபடி நான் சாப்பிட ஆரம்பித்தேன். அவளும் அர்ச்சனையை ஆரம்பித்தாள்.
“எப்படா நான் வெளில போவேன்னு காத்துட்டிருந்தீங்களா பாட்டியும் பேத்தியும்? ஏன் அத்தை இப்படிப் பண்றீங்க? அவதான் சின்னப் பொண்ணு... அம்மாவுக்குத் தெரியக்கூடாதுன்னு சொல்றா. நீங்க அவளுக்கு நல்ல புத்தி சொல்ல மாட்டீங்களா?
எனக்கு எதிரா அவளைத் திருப்பி விடறதே உங்களுக்கு வேலையாப் போச்சு. நைட் அவளுக்கு டிஃபன் கொடுக்கக் கூடாதுனு டாக்டர் சொன்னது உங்களுக்கு தெரியுமில்ல. அப்புறம் எதுக்கு அவளுக்கு தோசை கொடுக்கறீங்க?
இப்போ தோசை சாப்பிட்டா சாதம் ஒழுங்கா சாப்பிட மாட்டா. டாக்டர் என்னைத் திட்டறாரு.
இந்த வயசுல எதுக்குமா குழந்தைக்கு டிஃபன் கொடுக்கறீங்க? அவ வீக்கா இருக்கா. நைட் நல்லா சாதம் காய்கறி எல்லாம் கொடுங்கனு திட்டறார். நீங்க என்னன்னா எனக்கு எதிரா வேலை பார்த்துட்டிருக்கீங்க.
நான் கத்தினா மட்டும் ஏதோ நான் தேவையில்லாம சண்டை போடற மாதிரி நினைச்சுட்டு நீங்க அழுது ஆர்ப்பாட்டம் பண்றீங்க. ஆனா நான் இல்லாத நேரத்துல வீட்டில் நடக்கற இந்த வேலைகளை எல்லாம் நான் எப்படி மத்தவங்களுக்குப் புரிய வைக்கறது?”
“இல்ல ரேகா, ஒரே ஒரு வாய் தான் சாப்பிட்டா. நான் வேண்டாம்னு தான் சொன்னேன்.”
“அதான் கேட்டேனே... நான் உள்ளே வரும்போது அம்மாகிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டுத் தானே அவ போறா. ஒரு வாய் சாப்பிட்டதுக்கு இவ்வளவு பில்டப்பா?
வயசானவங்க குழந்தைகளுக்கு நல்ல புத்தி சொல்லிக் கொடுப்பாங்க. ஆனா நம்ம வீட்ல எல்லாம் தலைகீழா இருக்கு. பெத்த அம்மாவுக்கு எதிரா குழந்தையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கற வேலை எல்லாம் நடக்குது.”
“இப்ப எதுக்கு இவ்வளவு வார்த்தைகளைத் தேவையில்லாம பேசறே ரேகா? அவ தான் வந்து ஒரு வாய் கேட்டா. நான் வேண்டாம்னு சொல்லிப் பார்த்தேன். அவளே ஒரு துண்டு தோசையைப் பிச்சு வாய்ல போட்டுக்கிட்டா, அவ்வளவுதான்.”
“பண்றதையும் பண்ணிட்டு குழந்தை மேல எதுக்கு பழி போடறீங்க?”
இப்படியாக அர்ச்சனை தொடர்ந்தது. அவள் கத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் என் மகன் விஷ்ணுவும் ஆஃபீஸிலிருந்து வந்தான்.
“என்ன ரேகா, என்ன ஆச்சு? நீ போடற சத்தம் நாலு வீடு தள்ளி கேக்குது. வீட்டு வாசல்ல உட்கார்ந்திருக்கறவங்க எல்லாம் என்னை ஒரு மாதிரி பார்க்கறாங்க.”
“ஆமாங்க, எனக்கு இதான் வேலை பாருங்க. பைத்தியமா புடிச்சிருக்கு சும்மா கத்திட்டு இருக்கறதுக்கு? என்னை மட்டுமே சொல்லாதீங்க. பத்து நிமிஷம் கடைக்குப் போயிட்டு வரதுக்குள்ள வர்ஷாவுக்கு தோசை சாப்பிடக் கொடுத்துட்டு எனக்குத் தெரிய வேண்டாம்னு வேற பேசிக்கறாங்க.
டாக்டர் என்னைத் திட்டறார். ஏதோ நான்தான் அவளுக்கு ஒழுங்கா சாப்பாடு கொடுக்காத மாதிரி. நீங்களும் நான் தேவையில்லாம கத்தற மாதிரி பேசறீங்க.
எல்லாம் என் நேரம். ஆளாளுக்கு திருட்டுத்தனமா வேலை பார்த்துட்டு என் தலையை உருட்டிட்டு இருக்கீங்க.”
அதற்கு மேல் எனக்கு தோசை உள்ளே இறங்கவில்லை. வெறுமனே பிய்த்துப் போட்ட தோசைத் துண்டுகளைக் கைகளால் அளைந்து கொண்டு, தலையைக் குனிந்து உட்கார்ந்திருதேன்.
“என்னம்மா நீங்க, ஏன் இப்படிப் பண்றீங்க? வர்ஷா விஷயத்துல தலையிடாதீங்கன்னு எவ்வளவு தடவை உங்களுக்கு சொல்லியாச்சு. அவளுக்கு என்ன கொடுக்கணும்னு ரேகாவுக்குத் தெரியும். எப்பவும் இதே வேலையாப் போச்சு உங்களுக்கு.
மனுஷன் வேலை முடிச்சு வீட்டுக்கு வந்தா நிம்மதியா இருக்க முடியுதா? உள்ளே நுழையும் போதே சண்டை. இன்னும் ரெண்டு மணி நேரம் ஆஃபீசுலயே உட்கார்ந்துட்டுதான் வீட்டுக்கு வரணும் போல.
வயசு ஆகுதே தவிர உங்களுக்கு எதுவுமே புரிய மாட்டேங்குது. உங்களுக்கு என்ன வேணுமோ அதை செஞ்சு சாப்பிடறதோட நிறுத்திக்கோங்க. வர்ஷா விஷயத்துல தலையிடாதீங்க. அவளை சாப்பிட வைக்கறது, படிக்க வைக்கறது இதெல்லாம் ரேகா பார்த்துப்பா. வயசானவங்களைச் சொல்றதா இல்ல வயசு கம்மியானவங்களை சொல்றதா...
ஒண்ணுமே புரியல.”
சலித்துக் கொண்டு மகன் உள்ளே போக எனக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. ஆனால் அழ முடியுமா? முடியாதே.
கண்ணீரே வெளியே வந்து விடாதே என்று மௌனமாகக் கெஞ்சிக் கொண்டிருந்தேன். வேறு என்ன செய்வது? ஏற்கனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சட்டென்று கண்ணீர் வெளியே வந்ததும் நன்றாக அர்ச்சனைகளை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.
“இப்போ எதுக்கு கண்ணைக் கசக்கறீங்க? வீட்டுக்குப் பெரியவங்க.... நேரம் காலம் இல்லாம இப்படி அழுதுட்டிருந்தா குடும்பம் எப்படி நல்லாயிருக்கும். வீடு விளங்குமா?
நீங்க எங்களுக்கு சொல்லித் தரணும்.... நீங்களே அழுதுட்டிருக்கீங்க. நீங்க அழுதா உங்க பையன் என்னைத் திட்டுவார். அழுதழுது மாய்மாலம் பண்ணி எல்லாத்தையும் சாதிச்சுக்கோங்க.”
இது மருமகளின் வசனம். நான் அழுவதைப் பார்த்தால் என் மகனுக்கும் தர்மசங்கடமாகிவிடும்.
“என்னம்மா நீங்க... அவ தான் ஏதோ ஒண்ணு பேசினா நீங்களும் இப்படி அழுதா எப்படி?
எதுக்குத் தான் அழுறதுன்னே இல்லையா உங்களுக்கு? என்னை என்ன பண்ணச் சொல்றீங்க?
ரேகாவை வேணும்னா நல்லா திட்டி விடட்டுமா? அப்போ உங்களுக்கு திருப்தியா இருக்குமா?”
இது ஏதோ கணவன் மனைவிக்குள் சண்டை வர வேண்டும் என்று நான் ஆசைப்படுவதாக நினைத்துக்கொண்டு இப்படிப் பேசுவான். எதற்கு வம்பு. இப்படிப் பலவித அனுபவங்களைக் கடந்து வந்திருந்ததால், ஒரு துண்டு தோசைக்கு வாங்கிய அர்ச்சனைகளை தோசையோடு சேர்த்து மென்று விழுங்கினேன். பிரவாகமாகப் பொங்கி வந்த கண்ணீரை அப்படியே உள்ளே திருப்பி அனுப்பி சோகத்தையும் தாகத்தையும் கரைத்துக் கொண்டு அடுத்த வேலைக்குத் தயாரானேன்.
- ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை.