குறள் கூறும் புறங்கூறாமை | கவிஞர்.அ.ரோஸ்லின்.

| image credit: www.tamilsirukathaigal.com |

தெய்வப்பலவர் அறத்துப்பாலின் 19 ஆம் அதிகாரத்தில் புறங்கூறாமை பற்றி நவில்கிறார். மனித விழுமியங்கள் ஒருபுறச் சார்பானவையாக காணப்படுகின்றன. தன்னைப்பற்றி நல்லனவாகவும் பிறனைப் பற்றி அல்லது கூறுவதாகவும் காணப்படுவது இயல்பானது என்றாலும் அதைத் தகாத மனம் என சுட்டிக்காட்டுகிறார் வள்ளுவப் பெருந்தகை. குறிப்பாக அறங்களின் நூலான திருக்குறள் மனிதனின் நடத்தைகளை வெளிப்படுத்தி தனது எண்ணத்தின் வழியே மாந்தர்களைச் சீர்படுத்தும் வண்ணம் பெற்ற கருவியாக குறட்பாக்கள் அமைந்திருக்கின்றன நமது உலகப் பொதுமறையாம் திருக்குறளில். 
செய்நன்றி அறிதல், அழுக்காறாமை, ஒழுக்கமுடைமை போன்ற அதிகாரங்கள் மிகவும் புகழ்வாய்ந்த அறக்கருத்துக்களை கூறுபவை, என்றபோதும் புறங்கூறாமை என்பது வாய்மையைத் தவிர்த்து அல்லது அதன் புறத்து கூறுதலால் புறங்கூறுதல் என அழைக்கப்படுவதாகக் கருதலாம்,. வாழ்வியல் நூலின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் அகம் மற்றும் புறம் பற்றிய அழுக்குகளை அறவே நீக்கும் பாயிரங்களை கொண்டவை.             

முக்காலமும் உணர்ந்த வள்ளுவப் பெருந்தகையின் எழுத்தை உணர்ந்தவர்களாலேயே திருக்குறளைப் புரிந்துகொள்ளமுடியும். தவ வாழ்க்கையில் மனிதமும் மிருகமும் போட்டி போட மனிதம் வெல்வதற்கான அச்சாணியைப் படைப்பவை அறத்தின் கண் விளைந்த குறட்பாக்களே.


மனித மனதும் புறங்கூறுதலும்:

மனம் என்பது உணர்வுகளின் கட்டமைவு. மனம் எப்பொழுதும் தன் சார்ந்த காரணங்களிலேயே தீவிரத்தன்மை கொண்டது என்பதையே புறங்கூறாமை அதிகாரம் விளக்குகிறது. மனதின் வெளிப்பாட்டிலிருந்து விலகி தனக்கும் பிறருக்கமான அளவுகோலை முன்னிறுத்துகிறது புறங்கூறுதல்.


புறங்கூறுதல் எப்படி அறத்துப்பாலின் பெரும் கருத்தாக குறிக்கப்படுகிறது என்பதை முதல் குறட்பாவிலேயே கூறுகிறார் வள்ளுவர். 

"அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.

ஒருவன் பாவம் செய்தாலும் பரவாயில்லை என்கிறது இத்திருக்குறள்.மற்றவரைப் பற்றி புறங்கூறாமல் இருந்தாலே போதும் அவனுக்கு நன்மை விளையும் என்பதே இக்குறளின் கருத்து. பாவத்தை விட பெரும்பாவம் புறங்கூறுதல் என்பது இதனால் விளங்கும்.அடுத்த குறள் அறத்தை கூட அழித்துக் கொள் என்கிறது. ஆனால் ஒருவன் இல்லாதவிடத்து அவனைப் பற்றிப் பேசி தீமையை விலைக்கு வாங்காதே என்கிறது. இப்படித்தான் மனம் என்பது எப்படி பாழ்பட்டுக் கிடக்கிறது என்பதும் புலனாகும்.


சமயங்களில் புறங்கூறாமை:

விவிலியத்தின் கருத்துக்களை உள்வாங்கி திருக்குறளின் பல பகுதிகள் காணப்படுவதை நாம் பார்க்க முடியும். பொய்யைக் களைந்து உண்மை பேசுபவர்களாக நாம் காணப்பட வேண்டும், மற்றவர்களுடன் பேசும்பொழுது மெய்யானவற்றையே பேச வேண்டும் என்கிறது பைபிள். பொய்யான நகைப்பை கூட விட வேண்டும் என்கிறது அடுத்த குறள்.

"அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
    
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான் என்கிறது திரு குர்ஆன். புறங்கூறி பொய்த்த வாழ்வு வாழ்வதைவிட வறுமையுற்று சாதல் நல்லது என்கிறார் பெருந்தகை,புறம் கூறுகிறவனுக்கு அறத்தின் பொருட்டு விளையும் நன்மை பற்றி அறிந்திருக்க இயலாது. நன்மை எது தீமை எது என்று அறிய முடியாதபடி புறங்கூறுதல் அவன் கண்களைக் கட்டி வைத்துள்ளது எனப்புலவர் கூறுகிறார்.


புறம் கூறுபவர்களின் வாழ்வியல்:

பிறரைப் பற்றி புறம் பேசுபவர்கள் தங்களைப் பற்றியும் மற்றோர் அவதூறு பேசக்கூடும் என்பதை உணர வேண்டும். குடும்பங்களில் வேலை நிலையங்களில், இத்தகைய மலினமான நடவடிக்கையை கைவிட்டால் மட்டுமே உள்ளத்தில் அன்பு குடியிருக்கும், இல்லையேல் வஞ்சத்தின் பிறப்பிடமாய்க் குடும்பங்கள் மாறக்கூடும். சமீபத்தில் இறந்த சின்னத்திரை நடிகையின் வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றியும் அவதூறுப் பேச்சுகள் அதிகமாயின. பிறர் வாழ்க்கையில் நடப்பதைப் பற்றி பேசுவதே தற்போதைய பழக்கமாகிவிட்டது. ஒருவனைக் காணாதபோது பழித்துப் பேசிவிட்டு அவர்களை நேரடியாகக் காணும் போது புகழ்தல் மிகவும் மலினமான காரியம்.

"பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்."

அலுவலகங்களில் உடன் பணியாற்றுபவர்கள் பற்றி மேலதிகாரிகளிடம் சொல்லிக் கொடுத்து பெரும் காரியத்தை சாதித்த தாய் எண்ணிக் கொள்ளும் மானிடர்கள் தங்களது குறைகளையும் வேறு எவரேனும் சொல்லக்கூடும் என்னும் உலக உண்மையை சாமானியமாக மறந்து விடுகிறார்கள்.


ஒரு பெண்ணைப் பற்றியும் அல்லது திருமண பந்தத்தில் உள்ள பெண்ணைப் பற்றியோ அவதூறாக வாய்க்கு வந்த படியெல்லாம் பேசிச் செல்லும் மாக்களை, அடுத்தவரது குறையை மற்றவரிடம் கூறுபவன் குறையும் பின்னர் மற்றவரால் கூறப்படும் என்பதை வசதியாய் மறந்து விட்டு புறம் பேசித் திரிகிறார்கள் என்கிறார் வள்ளுவர்.

நம் முன்னே இல்லாத ஒரு நபரைப் பற்றி அவரது சூழல்கள் பற்றியும் குடும்பம் வேலையைப் பற்றியும் மற்றவர் எவ்வாறு கூற இயலும். அந்த சூழலுக்குள் வாழ்க்கைப்பட்ட அந்த குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே அவர் கடந்து வந்த பாதை தெரியும். எவ்வாறு சீதாபிராட்டியை அவளது நடத்தையை அவதூறுக்கு உள்ளாக்கினார்கள். அவர்களுக்கு தெரியுமா சீதை கடந்துவந்த பாதை. கோவலனின் வாழ்வையே புறங்கூறுதல் சிதைத்தது என்று கூறலாமா.
 "துன்னியார் குற்றமும் தூற்றும் - மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.

தன்னுடன் நெருக்கமாய் இருப்பவர்களைப் பற்றி குறை சொல்லிக்கொண்டு திரிபவர்கள் மற்றவர்கள் குறையை எப்படி எல்லாம் கூறுவர், என்பதாக இக்குறட்பாவில் கேட்கிறார் புலவர்.


ஒருவரை அவர் செய்யும் செயல்களை வைத்து அளவிட்டு அதனால் என்ன பயன். ஒருவருடைய குறையை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் எத்தனை பேருக்கு உண்டு, அவ்வாறு இல்லாததாலேயே இவ்வாறான புறங்கூறுதல் பழக்கம் தொன்றுதொட்டு நம்மைத் துரத்துகிறது. அடுத்தவன் குறையை பார்த்துக்கொண்டே இருப்பவன் தான் குறைவு பட்டவன் என்பதை அறிவதில்லை. மற்றவர்களை குறை சொல்வதன் மூலம் தன்னை மேலானவர்களாக காட்டிக் கொள்ளும் மனப்பான்மை தனது குறையுடனேயே முடியும் என்பதே வள்ளுவர் வாக்கு.
  
முடிவுரை:

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு."
 
மற்றவருடைய குற்றத்தைப் போல நம் குற்றத்தையும் ஒத்துக்கொள்ளும் மனப்பாங்கு இருந்தால் இந்த வாழ்க்கைக்குத் துன்பம் ஏதும் உண்டோ? "தன்னைப்போல் பிறரையும் நேசி" இதுவே உலகத்தின் மா மொழி. அவ்வாறு நேசிக்க தொடங்கி விட்டால் மனித மனககளைக் கடந்து நாம் பயணம் செய்ய முடியும். மனங்களை கடக்கும்போது அங்கே அன்பின் அலை மட்டுமே உள்ளத்தில் நிழலாடும்.
****************

கவிஞர்.அ.ரோஸ்லின், 

Post a Comment

0Comments
Post a Comment (0)