| Image Credit: www.thenewsminute.com | |
இன்று காலையில், என் பேரன் மிதுனை ஸ்கூல் பஸ் ஏற்றிவிடக் கூட்டிக் கொண்டு போன போது பேசிக் கொண்டே வந்தான்.
“பாட்டி.. ஈவினிங்க் எனக்கு கட்லட் பண்ணித் தரியா?”
“கண்டிப்பா பண்ணித் தரேன். உனக்குத்தான் கட்லட் ரொம்பப் பிடிக்குமே.”
“ஆமாம் பாட்டி. எனக்குப் பிடிச்ச டிஸ்னி சேனல் பார்த்துட்டே கட்லட் சாப்பிட்டா நல்லாயிருக்கும். சரி பாட்டி... எனக்குக் கட்லட் பிடிக்கும், டிஸ்னி சேனல் பிடிக்கும், ஐஸ்க்ரீம் பிடிக்கும், கிரிக்கெட் பிடிக்கும், சூர்யா பிடிக்கும், பீச் பிடிக்கும்.
அதே மாதிரி உனக்கு என்னெல்லாம் பிடிக்கும்?”
“எனக்கு மிதுன் தான் ரொம்பப் பிடிக்கும்.”
“அதில்லே பாட்டி...எனக்கும் உன்னைப் பிடிக்கும். ஆனா சாப்பிடறதுல, கலர்ல, ஸ்போர்ட்ஸ்ல இதுல எல்லாம் உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லவே இல்லையே?”
ஆறு வயதுப் பேரன் திடீரென்று அப்படிக் கேட்டதும், எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அதற்குள் பஸ் வந்து விடவே, “ஈவினிங்க் வந்து கேக்கறேன் பாட்டி,” என்று சொல்லி விட்டுப் போய்விட்டான்.
அவனது இந்தக் கேள்வி என்னைக் கொஞ்சம் உலுக்கி விட்டது. அறுபது வயதான என்னிடம், இந்தக் கேள்வியை சமீபத்தில் யாரும் கேட்டதாக ஞாபகம் இல்லை. சமீபத்தில் என்றால் கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக. அதனால் அவன் கேட்டதில் இருந்து அதே யோசனையாகவே இருந்தது.
ஆமாம்... எனக்கு என்ன பிடிக்கும்...? எனக்கே பதில் சொல்லத் தெரியவில்லை.
பொத்தாம் பொதுவாக எல்லாமே எனக்குப் பிடிக்கும் என்று சொல்லி விடலாம். ஆனால் எனக்கே எனக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் இருக்க வேண்டுமல்லவா... அதெல்லாம் என்ன?
இருபது வயது முடிந்திருந்த போது, அப்பா மாப்பிள்ளை பார்த்து, “என்னம்மா ஜானகி...
பையனைப் பிடிச்சிருக்கில்லே? எங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்குமா,” என்றார்.
என்ன பதில் சொல்வதென்று தலையைக் குனிந்து யோசித்துக் கொண்டிருந்ததை, வெட்கப்பட்டு மௌனமாக இருப்பதாக அவர்களே நினைத்துக் கொண்டு மடமடவென வேலைகளில் இறங்கிவிட்டனர்.
அநேகமாக அன்று ஆரம்பித்திருக்கும் என நினைக்கிறேன்... இந்த எனக்குப் பிடித்தது என்பதை ஓரங்கட்டும் பழக்கம். திருமணமாகி வந்த இடம் பெரிய குடும்பம். கணவன், மாமனார், மாமியார், கொழுந்தன், நாத்தனார் என களைகட்டும் வீடு. என் கணவர் வீட்டுக்குப் பெரியவர். மூத்த மருமகளாக எல்லாப் பொறுப்புகளும் என் தலையில் விழுந்தன.
பொறுப்புகளைச் சுமப்பதில் என் நாட்கள் கரைந்தன. வரலாற்று நாவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்... அதுவும் சாண்டில்யன் நாவல்கள்... அட ஆமாம் சாண்டில்யன் நாவல்கள் எனக்கு மிகவும் பிடிக்குமே... எப்படி இவ்வளவு நாட்கள் மறந்திருந்தேன்?
கல்யாணத்திற்கு முன் வீட்டில் நிறைய படித்ததுண்டு. ஆனால் திருமணமான புதிதில், என் அம்மா வந்த போது கொண்டு வரச் சொல்லி, கிடைத்த நேரத்தில் படிக்க ஆரம்பித்தேன்.
இரண்டு, மூன்று நாட்கள் பேசாமலிருந்த மாமியார், “என்ன...எப்பப்பாரு ஏதோ புஸ்தகத்தை வச்சுண்டு உக்கார்ந்துக்கறே? படிச்சு என்ன பரீட்சையா எழுதப் போறே? அந்த நேரத்துல உருப்படியா ஏதாவது வீட்டு வேலைகளைப் பண்ணலாம்,” என்று எரிந்து விழுந்தார்.
கேட்டதும், மனது மிகவும் நொறுங்கித்தான் போனது. ஒரு புஸ்தகம் படிக்கக் கூட உரிமை இல்லையா என்ன? ஆனால் எதிர்த்துப் பேசும் அளவிற்கு தைரியம் கிடையாது. புஸ்தகம் படிக்கும் பழக்கத்தை அன்று நிறுத்தியவள்தான்.
அப்புறம் காலச் சுழற்சியில், பொறுப்புகள் அதிகரித்ததில் அது மறந்தே போனது. வேறு என்ன...? கொஞ்சம் யோசித்தேன். ஆ.... கைவேலைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நானும், என் அக்காவும் சேர்ந்து நிறைய கைவேலைகள் செய்வோம். அதிலும் வயர்க்கூடைகள் பின்னுதல் அப்பொழுது மிகவும் பிரபலம். விதவிதமான வயர்க் கூடைகள் செய்து உறவினர்களுக்கு எல்லாம் கொடுத்தோம். அதுவும் புகுந்த வீட்டில் தடை செய்யப்படவே அப்படியே விட்டுவிட்டேன்.
இப்படி யோசிக்க யோசிக்க ஒவ்வொன்றாய் ஞாபகம் வந்தது. பாரதியார் கவிதைகள், சுசீலாவின் பாடல்கள், ஜெமினி கணேசன் படங்கள், சௌந்தர் ராஜன் பாடல்கள், என் அம்மா போடும் வடுமாங்கா ஊறுகாய், ஜவ்வரிசி வடாம்... இப்படி சொல்லிக் கொண்டே போகிற அளவுக்கு நான் தொலைத்த எனக்குப் பிடித்தவைகள் வரிசையாய் எனக்கு ஞாபகம் வந்தன.
இதில் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு காரணத்திற்காக, அல்லது குடும்பத்தில் யாராவது ஒருவருக்காக நான் விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. காலப்போக்கில், என் மகன், மகள் வளர்ந்து, வீட்டில் டி.வி, கார் என எல்லாம் மாறியது. ஆனால் என் நிலைமை அதே தான்.
டி.வி. நிகழ்ச்சியில் தொடங்கி, வெளியில் சென்று சாப்பிடுவது வரை எல்லாம் கணவர் குழந்தைகளின் விருப்பமாகத் தான் இருக்கும். எனக்கும் அதுவே பழகி விட்டது.
இப்பொழுது என் மகன், மகளுக்குக் கல்யாணம் ஆகி பேரன், பேத்தி எடுத்தாயிற்று. என் மருமகள் அவளுக்குப் பிடிக்காதென்றால் கறாராகச் சொல்லி விடுவாள். எனக்கு இப்படியெல்லாம் பேசத் தெரியாதது என் தவறா? எனக்குத் தெரியவில்லை.
அநேகமாக என் காலத்தில் வாழ்ந்து, இப்போது அறுபது, அறுபத்தைந்து வயதில் இருக்கும் நிறைய பெண்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்று நினைக்கறேன்.
இன்று என் பேரன் கேட்டது போல் என் கணவர்கூட என்னிடம் கேட்டதில்லை. அவராகவே “உனக்கு இந்தக் கலர்தான் நல்லாயிருக்கும்; இதைச் சாப்பிட்டுப் பார், உனக்குப் பிடிக்கும்,” என முடிவெடுத்துதான் பழக்கம். அதைப் பார்த்துப் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ என் மகனும் ஏறக்குறைய அப்பாவுக்குத் தப்பாமல் இருக்கிறான்.
இந்த யோசனைகளிலேயே மாலை வரை ஓட்டிவிட்டேன். இப்பொழுது பேரனிடம் சொல்ல என்னிடம் பதில் தயாராக இருந்தது.
வாரக் கடைசியில் மகனுடன் கடைக்குப் போனபோது, எனக்குப் பிடித்த பாரதியார் கவிதைகள், சாண்டில்யன் நாவல்கள் இரண்டு எனத் தேடிப் பிடித்து வாங்கிக் கொண்டேன்.
என் மகன் ஆச்சரியமாக என்னைப் பார்த்து,”என்னம்மா... புக்ஸ் படிப்பீங்களா?
இவ்வளவு நாள் எங்கிட்ட சொல்லவே இல்லையே? பாரதியார் பிடிக்குமா உங்களுக்கு?” என்று கேட்டான்.
என்ன பதில் சொல்வது? சிரிப்பையே பதிலாக்கி விட்டு, புத்தகங்களை நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன். எனக்கு இன்னும் வயது நிறைய ஆகிவிடவில்லை. நான் தொலைத்த எனக்குப் பிடித்தவைகளைக் கண்டெடுக்க இன்னும் எனக்கு வயது இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் வீட்டிற்குத் திரும்பினேன்.
- ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை.