"அக்கா… சீக்கிரம் வாங்க!" என்று பேருந்தின் படியில் நின்று கொண்டு இயன்மதியை அழைத்தாள் உலகமதி.
"அண்ணா… அண்ணா… ஒரு நிமிஷம்?" என்று பேருந்து நடந்துநரிடம் கெஞ்சினாள் உலகமதி.
"உங்களோட நெதமும் இதே வேலையாப் போச்சும்மா…" என்று உரையாடிக் கொண்டிருக்கும்போதே கையில் ஒரு பெரிய பேப்பர் சுருளுடனும், தோளில் காலேஜ் பேக் ஒன்றை அணிந்து கொண்டு மூச்சிரைக்கப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி ஓடி வந்தாள் இயன்மதி.
இந்தப் பேருந்தை விட்டால் அடுத்து ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டு்ம் என்பதால், தன் கல்லூரியில் படிக்கும் தன்னை விட இரண்டு வயது மூத்தவளும், உலகமதியின் தோழியுமான இயன்மதிக்காக, வழக்கம் போலப் பேருந்து நடத்துநரிடம் ஏச்சு வாங்கிக் கொண்டு இருவரும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தனர்.
"அக்கா… நாளையில இருந்து செமஸ்டர் லீவ் ஸ்டார்ட் ஆகுது. இனி ஒரு மாசத்துக்கு உங்களைப் பார்க்கவே முடியாதுக்கா. நான் இந்த லீவுக்கு, என் தாத்தா, பாட்டி ஊருக்குப் போறேன்."
"நீ தாத்தா ஊருக்குப் போயிட்டு, நல்லா எஞ்சாய் பண்ணிட்டு வா உலகு. மறுபடியும் காலேஜ் ஓபன் ஆனதும் நாம சேர்ந்து தான காலேஜ் போகப் போறோம்." என்று இருவரும் பல கதைகளைப் பேசி முடிக்கவும் கல்லூரியும் வந்தது.
மீண்டும் மாலை கல்லூரி முடிந்து பேசிக் கொண்டே வீட்டிற்குச் செல்லும் போது, சில இளைஞர்கள் அவர்களை வம்பிற்கு இழுக்கவே "அக்கா.. அவுங்க நம்மள தான்க்கா கிண்டல் பண்ணுறாங்க. எனக்குப் பயமாயிருக்குக்கா.."
"நீ பயப்படாதே! பேசாம வா…" என்று இயன்மதி கூறவும், எதையும் கண்டு கொள்ளாமல் அவர்கள் தெருவைப் பார்த்து இருவரும் விடைப் பெற்றுக் கொண்டு வீட்டிற்குச் சென்றனர்.
ஒரு மாதம் கழித்துக் கல்லூரிக்குச் செல்லும் முதல் நாள், இயன்மதிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் உலகமதி நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்க அவள் வரவே இல்லை.
மீண்டும் மாலை கல்லூரி முடித்து வரும்போது பேருந்து நிறுத்தத்தில் இயன்மதி நின்று கொண்டிருந்தாள்.
"அக்கா… எப்படியிருக்கீங்க? ஏன் காலையில வரல? நீங்க வீட்டுக்குப் போகாம ஒத்தையல இங்க என்ன பண்ணுறீங்க?"
"அது இருக்கட்டும் உலகு. ஏன் இன்னைக்கு இவ்வளவு லேட்டு?"
"அதுவாக்கா… என் க்ளோஸ் ப்ரெண்ட் இன்பாக்கு, இன்னைக்குப் பிறந்தநாளு. அதான் காலேஜ் முடிஞ்சதும் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து கொண்டாடுனோம். அதான் வழக்கமா வர்ற பஸ்ல வர முடியல."
"சரி.. சரி.. இனி இப்படியெல்லாம் லேட்டாகும்னா, முன்ன கூட்டியே எங்கிட்ட, இல்லாட்டி வீட்டுல சொல்லிரு. நம்ம ஏரியா பத்தி தான் உனக்குத் தெரியும்ல" என்று பேசிக் கொண்டு அவரவர் தெரு வந்ததும், இருவரும் விடைப் பெற்று திரும்பிச் சென்று கொண்டிருக்கும் போது எதிரே உலகுமதியின் தாயார் பதற்றத்துடன் வந்தார்.
"ஏன்டி… இவ்வளவு நேரம்?"
"ஏம்மா…என்னாச்சு?"
"போன வாரம் உன் ப்ரெண்ட் இயன்மதிய சில ரவுடி பசங்க சேர்ந்து அந்தப் பிள்ளைய வம்பிழுத்திருக்காங்கடி. அந்தப் பொண்ணு பயத்துல ஓடிப் போயி தெரியாம பஸ்ஸூக்கு குறுக்கால விழுந்திருக்காடி. பாவம் அந்தப் பொண்ணு செத்துப் போச்சாம்டி" என்றதும் அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
எதிர் தெருவில் திரும்பிப் பார்த்தால், அங்கு இயன்மதியைக் காணவில்லை.
இயன்மதி மரித்த பின்னும், தன் மீது கொண்டிருந்த அக்கறையையும், அன்பையும் நினைத்து விசும்பி விசும்பி தேம்பி அழத் தொடங்கினாள் உலகமதி.
தன்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்த சென்ற தன் பிரியசகியுடன் பழகிய நினைவுகளிலிருந்தும், அவளுடைய மறைவின் துக்கத்திலிருந்தும் மீண்டு வர உலகமதிக்கு பல ஆண்டுகளாகியது.
முற்றும்.
- திருமதி.இராஜதிலகம் பாலாஜி M.Tech
புடாபெஸ்ட், ஹங்கேரி