மரங்களை அழித்துவிட்டு,
மழைக்கான தேடல்.
மாட மாளிகைகள் கட்டிவிட்டு,
மூச்சுக் காற்றுக்கான தேடல்.
கூர் மதியைத் தொலைத்து விட்டு,
குடி நீருக்கான தேடல்-இப்படி
நீர் நிலைகள் மூடி விட்டு
நெடு மரங்கள் சாய்த்து விட்டு
வாழும் வகை தேடுகின்றோம்
வளம் தேடி ஓடுகின்றோம்
பாழும் உலகில் பிறந்தோமே-என்று
பழித்துப் பேசித் திரிகின்றோம்.
அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக
அரணாய் நிற்கும் தோழனாக
எல்லையின்றிப் பரந்திருந்த
இயற்கை வளங்களை அழித்துவிட்டு,
இழப்புகள் எண்ணி ஏங்குகின்றோம்
எங்கெங்கோ தேடி ஓடுகின்றோம்
விழித்துக் கொள்வோம் இனியேனும்
விடியும் பொழுதுகள் நலமாகும்
இயற்கை அன்னையை நேசிப்போம்
இருகரம் கொண்டு பூசிப்போம்
வயலும் வாழ்வும் சிறப்புறவே
வாருங்கள் கூடி உழைத்திடுவோம்.
- மைதிலி ராமையா.