![]() |
| Image Credit: www.betterhelp.com | |
கொஞ்சும் நெருப்பு
முதன்முதலாக உன்னைத் தீண்டிய பொழுது
என்னுள் காதல் சிலிர்ப்பைப் படரவிட்டாய்
உன்னுடனான என் உறவின் வாசம்
கனவோடும் கைகோர்த்து நேசம் வளர்த்தது
என் விடியலின் வெளிச்சமாய் நீ
என் உணர்வுகளின் வடிகாலாய் நீ
என் பயணங்களுக்குத் துணையாக வந்தாய்
என் உறக்கத்தைத் திருடிக் கொண்டாய்
என்னை உனக்குள் புகைப்படமாகச் சேமித்தாய்
என் தீண்டலில் நீ உயிர்ப்பெறும்
ஒவ்வொரு நொடியும் நானும் மலர்கிறேன்
என் தேவையறிந்த சேவகனாய் நீ
உன்னைப் பிரியாத அடிமையாய் நான்
கொஞ்சும் மழலையாய் உன்னை நினைத்தேன்
கொஞ்சம் கொஞ்சமாக உருக்கிக் குலைக்கும்
கொஞ்சும் நெருப்பு நீயெனத் தெளிந்தபோது
வெட்டிவிட முடியாத ஆறாம் விரலாக
என் கையோடு, என் வாழ்க்கையோடு
ஒன்றிப்போயிருந்தாய் என் கைப்பேசியே...
- ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை.