அம்மாவுக்கான பரிசு. | மைதிலி ராமையா,

| image credit: classpop.com |

"கல்யாணத்துக்குப் பிறகு நீ ரொம்ப மாறிட்டம்மா.  என்னால நம்பவே முடியலை என் பொண்ணு பூர்ணாவா இதுன்னு இருக்கு" என்றாள் கற்பகம்.



"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா எப்பவும் போலத்தான் இருக்கேன் நீயா எதையாவது கற்பனை பண்ணிகிட்டு கதை கிளப்பி விடாத" என்றாள் பூர்ணா.



"நான் பெத்து வளத்து ஆளாக்குன பெண்ணைப் பத்தி எனக்குத் தெரியாதா. இப்படி ஆற அமர நின்னு நிதானிச்சு பேசற பொண்ணா நீ. நிமிசத்துக்கு நூறு வார்த்தை படபடன்னு பொறிஞ்சு தள்ளுறவளாச்சே.



அத்தோட இல்லாம கணக்குப் பாத்து செலவு செய்யற. கச்சிதமா சமைக்கிற. எல்லாத்தையும் விட அதிசயமா மீந்தது மிச்சத்தை வீணாக்காம சூடு பண்ணி சாப்பிடற.



ஒரு நாளாச்சும் கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி இருந்திருக்கியான்னு சொல்லு பாப்போம்.



நீ ஒருத்தி வீட்டில இருந்தா பத்து பேரு இருக்கிற மாதிரி சளசளன்னு சத்தமா பேசிகிட்டே இருப்பியே எங்க போச்சு அந்தப் பேச்செல்லாம். இப்ப என்னவோ அளந்து அளந்து பேசற" என்ற கற்பகத்திடம்,வசமாக மாட்டிக் கொண்ட பூர்ணா வேறு வழியின்றி உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது.



"ஆமாம்மா நீ சொல்றது, நினைக்கிறது எல்லாமே நூத்துக்கு நூறு உண்மைதாம்மா. நான் மாறித்தான் போயிட்டேன் அதுக்கு ரெண்டு காரணம் இருக்கு. 



ஒண்ணு அங்க மாதிரி எனக்கு எதுவுமே தெரியாம எல்லாமே நீயும் அப்பாவுமே பாத்துக்கிட்ட மாதிரி இங்க இல்லை. எங்கிட்ட வரவு செலவு பொறுப்பை ஒப்படச்சுட்டாரு உன் மாப்பிள்ளை.



முதல்ல கொஞ்சம் பயமா இருந்தாலும், போகப்போக பழகிடுச்சு. என்ன வருது எவ்வளவு செலவு ஆகுது எப்படி நீங்க சமாளிக்கிறீங்க இப்படி எதுவுமே தெரியாம வளர்ந்ததால பொருளைப் பாழாக்கறதோ, பணத்தை கன்னா பின்னான்னு செலவு செய்யறதோ எனக்கு எந்த பாதிப்பையும் தரலை அது தப்புன்னும் தெரியலை அங்க.



இங்க சேமிச்சாலும் என் பொறுப்பு, செலவாயிட்டாலும் சமாளிக்கறதும் என் பொறுப்புன்னு ஆனதால,சிக்கனமா இருக்கவும், எந்தப் பொருளையும் வேஸ்ட் பண்ணாம இருக்கவும் ஆட்டமேட்டிக்கா பழகிட்டேன்" என பேசிக்கொண்டிருந்த மகளை பூரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த கற்பகம், "ஊம் அப்பறம் ரெண்டாவது காரணம் என்னா" என்றார் குரலிலும் பெருமிதம் பொங்க.



"சொல்றேம்மா நீ எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து ரொம்பவும் செல்லமா வளத்த. சத்தமா சிரிச்சாலோ, உங்கிட்ட வாய்க்கு வாய் எதிர்வாதம் பேசினாளோ நீ ஒண்ணுமே சொன்னதில்லை. 



நான் செஞ்ச எந்தத் தப்புமே உனக்கு தப்புன்னு தோணவேயில்லை.



ஆனா ஆத்தா என்ன சொல்லும். 'நல்லா பொண்ணு வளக்கிற போ. அதிசயமாத்தான் இருக்கு ஒலகத்துல இல்லாத அபூர்வத்தப் பொண்ணாப் பெத்துட்ட மாதிரில்ல செல்லம் குடுக்கிற.



இது ஒண்ணும் நல்லதுக்கேயில்லை. செல்லங்குடுத்து செல்லங்குடுத்து அதை சீரழிக்கப்போறன்னு' கத்துமில்ல.



நான் கூட பேசாத ஆத்தா உன் திருவாயைக் கொஞ்சம் மூடு நான் ஒண்ணும் ஒருநாளும் நீ நினைக்கிற மாதிரி சீரழிஞ்செல்லாம் போக மாட்டேன்னு கத்துவேனே. 



அப்பல்லாம் அது என்ன சொல்லும் நியாபகம் இருக்கா.' நான் சொல்லும் போது ஆத்தாளுக்கும் மவளுக்கும் வேம்பாத்தான் கசக்கும். இதுக்கு இருக்கிற வாய்க்கு எவன் வந்து மாட்டப்போறானோ இல்லை இழுத்து வச்சு நாலு சாத்து சாத்தப் போறானோ யாரு கண்டா.



அடக்கி ஒடுக்கி வளக்காம அவுத்துவிட்ட கோயில் காளையாட்டம் திரிய விட்டிருக்க இப்ப தெரியாது. போன அன்னைக்குப் போயி புதன் அன்னைக்கு கண்ணைக் கசக்கிகிட்டு வந்து நிக்கும் பாரு அன்னைக்குத் தெரியும்னு' சாபம் கொடுக்கிறா மாதிரி சொன்னுதில்ல.



அதான் எனக்கு செல்லம் கொடுத்து வளத்ததுக்காக நீ யார் வாயிலேயும் விழுந்து எழக்கூடாதுன்னு வைராக்கியம் எடுத்துகிட்டேன்.  



நீ இப்ப தலை நிமிர்த்தி நடக்கலாம் பேசலாம் என்ன வேணா செய்யலாம் பாரு.



அம்மா வீட்டில இருக்கிற வரை தான பொண்ணுங்களுக்கு தங்கு தடை இல்லாத சர்தோஷமும், சுதந்திரமும் கிடைக்கும். நாளைக்கு இது கிடைக்காதுங்கறதுக்காக, இன்னைக்கும் கொடுக்காம இருக்கிறது என்ன நியாயம் அதனால்தான் எம் பொண்ணை அவ்வளவு சந்தோஷமா வாழ வச்சேன். இப்ப என்ன குறைஞ்சு போச்சு. சமத்தா குடும்பம் பண்ணலையா, குடும்பப் பொறுப்பை நல்லபடியா ஏத்துகிட்டு நிர்வாகம் பண்ணலையான்னு நீயும் நெஞ்சு நிமிர்த்திப் பேசலாம்லம்மா.



உனக்கு இதைவிட வேற கைம்மாறு என்னால என்னம்மா செய்யமுடியும்" என்ற மகளை பூரித்த மனதோடு பேச வார்த்தையின்றி ஆரத் தழுவினாள் கற்பகம். 



- மைதிலி ராமையா.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)