Image Credit: Isha Yoga |
தன்னம்பிக்கை கொடு
தாயே! உன் மகவுக்கு,
தன்னம்பிக்கை நிறையக் கொடு.
நீயே துணையாக நின்றிருந்தால்
நெஞ்சுரம் இல்லாத நிலை வருமே.
விரல் பிடித்து நடை பழக்கு
விழுந்தால் எழவும் பழக்கு
அருகிருந்து வழி நடத்து
அழுதால் விழி துடைத்து
வாழும் வழி உணர்த்து
வற்றாத மன திடம் கொடுத்து.
சூழும் இடர் காண்கையிலே
சோராது போராட நீ பழக்கு.
எப்போதும் துணையாக நில்லாதே
எதிர் நீச்சல் போடட்டும் கற்றுக்கோடு
தப்பான பாதையெனில் திருப்பிவிடு
தானாக நடக்கட்டும் முயலவிடு.
- மைதிலி ராமையா.