பெண்ணுக்கு கல்வியே கண் | திருமதி.இராஜதிலகம் பாலாஜி.

| Image credit: the guardian |


"அம்மா… அம்மா…" என்று வீடே அதிரும் அளவிற்கு உரத்தக் குரலில் தன் தாயை அழைத்தான் சங்கரன்.



"எதுக்கு இப்போ இப்படி கூப்பாடு போடற சங்கரா?"



"ஆமாம்மா… இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன்."



"என்னடா… பதவி உயர்வு எதுவும் கொடுத்திருக்காங்களா?"



"அதையும் விட ரொம்ப சந்தோஷமான விஷயம்மா…"



"சொல்ல வந்ததை சீக்கிரமா சொல்லுடா…"



"அடுத்த வாரம் எங்க பள்ளிக்கு கலெக்டர் வர்றாங்க. அவுங்க கையால, இந்த மாவட்டத்தின் சிறந்த ஆசிரியர் விருது எனக்குத் தரப் போறாங்கம்மா…"



"ஓ! அப்படியா சங்கரா… ரொம்ப சந்தோஷம்டா… நானும் நீ விருது வாங்கறதப் பார்க்க வரலாமாடா?"



"தாராளமா வரலாம்மா… அடுத்த வாரம் நாம எல்லாரும் குடும்பத்தோட போகலாம்."



சங்கரன் கலெக்டரிடம் விருது வாங்க வேண்டிய நாளும் வந்தது. சங்கரனின் தாயார் கமலமும், அவரது குடும்பத்தாரும் ஆவலுடன் கிளம்பி பள்ளிக்குச் சென்றனர்.



பள்ளிக்குச் சென்றதும், சங்கரனின் அம்மா கமலம், வேகமாக முதல் வரிசையில் இருந்த சிறப்பு விருந்தினர்கள் அமரும் இருக்கையில் சென்று அமர்ந்தார். அங்கு வந்த மற்றொரு ஆசிரியர், இது கலெக்டருடைய அம்மாவும், மற்ற சிறப்பு விருந்தினர்களும் அமர வேண்டிய வரிசை என்றதும், முகம் சுழித்துக் கொண்டே பின் வரிசையில் சென்று அமர்ந்தார் கமலம்.


அவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரின் கவனமும் கலெக்டர் வரும் திசையை நோக்கியே இருந்தது. 



"இதோ, நம் மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியரும், அவருடைய தாயாரும் வருகிறார்கள்…" என்றதும் அனைவரும் மிகுந்த கரகோசத்துடன் வரவேற்றனர். கமலமும் விரைந்து மாவட்ட ஆட்சியர் வரும் பாதையைப் பார்த்தார்.



அவர்களைப் பார்த்த மறுநிமிடம் கமலத்திற்குத் தூக்கி வாரிப்போட்டது. இது கனவா? நிஜமா? என்று தன் கண்களை நன்கு துடைத்துக் கொண்டு மீண்டும் பார்த்தார் கமலம்.



"ஆமா… இவள் நம்ம வீட்டுல வேலைப் பார்த்த பார்வதியே தான். இவளுடைய மகளா கலெக்டரு…" என்று அதிர்ச்சிக்குள்ளானார்.



மாவட்ட ஆட்சியராக மேடையில் வீற்றிருக்கும் கலைச்செல்வியின் அம்மாவான பார்வதி, ஒரு காலத்தில் கமலத்தினுடைய வீட்டு வேலைகளைச் செய்யும் வீட்டு வேலைக்காரி.



அன்று ஒரு நாள், பார்வதிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைத் தெரிவிக்க வந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியான கலைச்செல்வியிடம், "உன் அம்மா வராட்டி என்ன… இன்னும் கொஞ்ச நாளுல நீயும் இந்த வேலையைத் தான பார்க்கப் போற. இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும் நீ இந்தப் பாத்திரத்த தேய்த்துக் கொடு" என்றார் கமலம்.



மறுநாள் வேலைக்கு வந்த பார்வதி, "அம்மா… இனி வீட்டு வேலை எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லுங்கம்மா. என் மகளைப் பார்க்கச் சொல்லாதீங்க…"



"உன் மகள் என்ன படிச்சு கலெக்டராவா ஆகப் போறா? எப்படினாலும் உன்னை மாதிரி பாத்திரம் தான தேய்க்க வரப் போறா?" என்று பார்வதியிடம் ஆவேசமாக உதிர்த்த வார்த்தைகள் அனைத்தும் கமலத்தின் நினைவிற்கு வந்து சென்றது.



பெண் கல்வியைக் குறித்தும், பெண்கள் கட்டாயம் கல்வி கற்பதின் அவசியம் குறித்தும், கல்வி அனைவருக்கும் பொதுவானது என்றும், கல்வியை சரியாகப் பயின்றால் யார் வேண்டுமானாலும் கலெக்டராகலாம், ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்வி கண் போன்றது என்ற ஊக்கம் நிறைந்த வார்த்தைகளைக் கூறினார் மாவட்ட ஆட்சியர். 



தன் தாயின் கடுமையான உழைப்பினாலும், தன்னுடைய விடா முயற்சியாலும் தான், தான் இந்த நிலையில் உயர்ந்திருக்கக் காரணம் என்று கூறியதும், விழாவிற்கு வருகை தந்த அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மாவட்ட ஆட்சியருக்கு மரியாதை செலுத்தினர். 



மாவட்ட ஆட்சியரின் பேச்சைக் கேட்டு, அங்கிருந்த பல தாய்மார்களோடு சேர்த்து கமலத்தின் கண்களும் கலங்கியது.



முற்றும்.



- திருமதி.இராஜதிலகம் பாலாஜி M.Tech, புடாபெஸ்ட், ஹங்கேரி.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)