மழலை ஏக்கம் | ஸ்ரீவித்யா பசுபதி

Image | Credit: www.japantimes.co.jp |


கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் அந்த இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணல்மேட்டில் வழக்கம்போல் வந்து உட்கார்ந்து கொண்டான் ஆறு வயது நிரம்பிய ராசு. அங்கே ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்திற்கானக் கட்டிட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 


அங்கே வேலை செய்பவர்கள் கூடாரம் அமைத்து அங்கேயே தங்கியிருந்தார்கள். அவர்களின் குழந்தைகள் அங்கு குவிந்திருக்கும் மணல், கல் இவற்றிற்கிடையே விளையாடிக் கொண்டிருப்பார்கள்.


ஆனால் ராசு மட்டும் கையில் ஒரு அழுக்கான பந்தை வைத்துக்கொண்டு மணல்மேட்டில் உட்கார்ந்து விடுவான்.


அங்கு உட்கார்ந்து, அருகில் இருக்கும் பதினைந்து மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பையே பார்த்துக் கொண்டிருப்பான். அவன் மனதில் ஆயிரம் ஆயிரம் கற்பனைகள் தோன்றி மறையும். அரை மணி நேரமாவது அவன் கற்பனைகளில் மூழ்கி விடுவான்.


‘எம்மாம் பெரிய வீடு ! அந்த வீட்டுல இருக்கற என்னை மாதிரி பசங்கெல்லாம் சந்தோஷமா இருப்பாங்க இல்ல. அவங்க வீட்டுக்குள்ள குப்பையே இருக்காதில்ல, அவங்ககிட்ட அழுக்கில்லாத பந்து இருக்கும். அதுல விளையாடுவாங்க. நல்லா இருக்கும்.


வீட்டுக்குள்ள வெளிச்சமா இருக்கும். குளிக்கறதுக்குத் தனியா இடமிருக்கும். சாப்பிட மேசை போட்டிருப்பாங்க. இப்போ அம்மா கட்டற வீடும் வேலை முடிஞ்ச பிறகு இப்படித் தான் இருக்கும்னு அம்மா சொல்லிச்சு. எனக்கும் இந்த மாதிரி ஒரு வீட்டுல இருக்க ஆசையா இருக்கு. அழுக்கில்லாத, கிழிஞ்சு போகாத சட்டை போடலாம், நிறைய பந்து வச்சு விளையாடலாம்.’  இப்படியாக விரியும் ராசுவின் கற்பனை. அதன்பிறகு தன் தாயைத் தேடி ஓடுவான்.


“யம்மா, அந்த வீடு மாதிரியே தான் நாம கட்டுற வீடும் இருக்குமா? கட்டி முடிச்சதும் நாம இந்த வீட்டுலயே இருக்கலாமா மா?” “ஏ ராசு, இதுல எல்லாம் நாம இருக்க முடியாது. வீடு கட்டறது மட்டும் தான் நம்ம வேலை.” 


“இப்படித் தான் மா போன வீடு கட்டும் போதும் சொன்னே. அடுத்த வீடு கட்டினா அது நமக்குத் தான்னு சொன்னியே மா.” “ஆமா ராசு, சொன்னேன். ஆனா இந்த வீடு வேண்டாம். சின்னதா இருக்கும். அடுத்த வீடு கட்டும் போது பெருசா கட்டி, நாம அதுலயே இருக்கலாம், சரியா. இப்போ போய் விளையாடு.


வேலை நடக்கற இடத்துல நிக்காதே.” குழப்பத்துடன் விளையாடுவான் ராசு. ஆனாலும் அவன் மனமெல்லாம் வீடு கட்டும் நாம், ஏன் இந்த வீட்டிலேயே தங்க முடியாது என்ற கேள்வியையே சுற்றி வரும். ஆனால் இப்படி மணலில் ஓடியாடி விளையாடும் வாய்ப்பு கிடைக்காத ஒரு சிறுவன் ராசுவை ஏக்கத்துடன் பார்ப்பதை ராசு அறிய வாய்ப்பில்லை.


அருகில் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், பத்தாவது மாடியிலிருக்கும் ராசுவின் வயதொத்த ஒரு சிறுவன், இவர்களின் விளையாட்டை தினமும் வேடிக்கை பார்ப்பான். வீடு நிறைய விளையாட்டு பொம்மைகள் இருந்தாலும், மணலில் ஓடி விளையாட முடியாத ஏக்கம் அவன் கண்களில் இருந்தது.


- நட்புடன் ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)