இன்பா பாகம் - 6 | திருமதி. இராஜதிலகம் பாலாஜி.

| படம் நன்றி : www.webneel.com |


எங்க போயிட்டு வர இன்பா?


எனக்கு நல்லாவே தெரியும் இன்பா... நீ எங்க போயிட்டு வந்திருப்பனு. என் பேச்சுக்கு மதிப்பு கொடுக்க கூடாதுனு மொத்தாம நீ முடிவுகட்டிடல...


கந்தசாமியின் பேச்சிற்கு மறுபதிலேதும் கூறாமல் மௌனமாக இருந்தாள் இன்பா.


சமையலறையிலிருந்து திடீரென "அம்மா.." என்ற சத்தத்துடன் குரல் கேட்டதும், இன்பா வேகமாக பதறி அடித்துக் கொண்டு அடுக்களையை நோக்கி விரைந்து சென்றாள்.


 அம்மா... என்னம்மா ஆச்சு? என்று தன் தாயிடம் வினவினாள்.


குரலை கொஞ்சம் கனைத்துக் கொண்டு என்னாச்சு? என்று ஆண்களுக்கே உரிய அதிகார தோரணையுடன் பார்வதியை நோக்கிக் கேட்டார் கந்தசாமி.


ஒன்னுமில்லங்க... சோறு வடிக்கும் போது கை நழுவி பாத்திரம் கவிழ்ந்திருச்சு.


கவனத்தை வேலையில வைக்காம வேறெங்கேயோ வச்சிருந்தா, இப்படி தான் நடக்கும். கொஞ்சம் கூறுவாறோட சிந்திச்சு வேலை செய்யனும். என்று கூறியதும், பார்வதி அம்மாவின் கண்கள் கலங்கியது.


அவர் அங்கிருந்து சென்றதும், ஏம்மா... கவனமா வேலைப் பார்க்கக் கூடாதா? அப்பா சொல்லுறதலாம் காதுல வாங்கிக்காதம்மா.... என்று தன் தாயின் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்து விட்டாள் இன்பா.


இது ஒன்னும் எனக்கு புதுசில்ல இன்பா. முப்பது வருஷமா இந்த மாதிரி ஏச்சு, நிறையா கேட்டு கேட்டு எனக்கு ரொம்ப அலுத்துப் போச்சு.


அந்த மனுஷன் ஒரு நாளுக்கூட எனக்கோ, என்னுடைய உணர்வுக்கோ மதிச்சு ஆச பாசமா நாளு வார்த்தை ஆறுதல் கூடச் சொல்லிப் பேசினதே இல்ல. என்னனாலும் நானும் ஒரு மனுஷி தானே. எத்தனை நாளைக்குத் தான் என் மனசுக்குள்ளேயே எல்லாத்தையும் போட்டு அடைச்சு வைக்க முடியும்.


அதான் என்னையே அறியாம கண்ணு கலங்கிடுச்சு. பொதுவாவே எல்லாரும் சொல்வாங்க பல வலிகளை தாண்டி வந்தவுங்களுக்கு இனி எவ்வளவு பெரிய வலி வந்தாலும் அதை பெருசு படுத்தாம தாங்கிட்டுப் போயிருவாங்கனு.


ஆனால் உண்மை அதுவல்ல இன்பா. ஒரு கதை உண்டு. ஒரு ஊருல ஒரு மாட்டு வண்டிக்காரன் தன்னுடைய மாட்டுக்கு நிறைய தீவனம் போட்டு நல்லா வளர்க்குறேன். அதுனால அளவுக்கு அதிகமா எவ்வளவு சுமைய வச்சாலும் சுமக்கும்னு தப்பு கணக்குப் போட்டு நித்தமும் ஒரு வியாபாரி அந்த மாடு தாங்க முடியாத அளவுக்கு சுமைய ஒவ்வொரு நாளும் வச்சு வியாபாரத்துக்கு போறான்.


கொஞ்ச நாளுலேயே அந்த மாட்டுக்குள்ள இருந்த பலமும் குறைஞ்சு நடக்கக்கூட திராணி இல்லாம போயிருச்சு. இப்படி தான் மனுஷங்களும் பல நேரம் தப்பு கணக்கு போடறாங்க. சில நேரத்துல சூழ்நிலைக்காக வலியை தாங்குற மனுஷங்க மேல, மேற்கொண்டு என்ன செஞ்சாலும் அவுங்க வலியைத் தாங்கு வாங்கனு ஏன் இப்படி முன் யோசனை இல்லாம சொல்லுறாங்க?


வலி எப்போ வந்தாலும் வலி தான இன்பா... என்று பார்வதி அம்மா புலம்பித் தள்ளினார். இப்போது பார்வதி அம்மாவின் அடுக்களையிலோ அல்லது அவரு வீட்டுலோ எந்தவொரு பெரிய பிரச்சனையும் நடக்கவில்லை என்பது இன்பாவிற்கு நன்றாகவே தெரியும்.


ஆனால் இன்பாவின் தந்தை உதிர்த்த வார்த்தைகளும், தன்னை நலம் விசாரிக்காது வேலையில் கவனம் வேண்டும் என்று தன் மீது கடிந்து கொண்டததை, தன் கணவர் மீதிருந்த ஆதங்கத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் ஏதேதோ சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தார் பார்வதி அம்மா. 


இன்பாவிற்கு இது ஒன்றும் புதிதல்ல. பாவம் காலை பகலவன் விடிந்ததிலிருந்து இரவு கதிரவன் மறைந்த பிறகும் கூட அடுக்களையே கதியென்று இருப்பவளுக்கு வேறெங்கு ஆறுதல் கிடைக்கும் என்று தன் அம்மாவின் நிலையறிந்து, ஒவ்வொரு முறை அவருடைய வலிகள் நிறைந்த புலம்பலைக் கேட்க ஒரு போதும் தயங்கமாட்டாள் இன்பா.


எப்படியாவது இந்த இடத்துல இருந்து நீ கிளம்பி தப்பிச்சு போயிரு இன்பா... 

உனக்காவது ஒரு நல்ல வாழ்க்கை துணை கிடைக்கட்டும்...; என்றதும் இன்பாவிற்கு ஒரு வித கலக்கம் ஏற்படத் தொடங்கியது. நாளை தன்னைப் பெண் பார்க்க வரப் போகிறார்கள் என்ற பதட்டமும் பயமும் மனதில் குடி கொண்டு இன்பாவிற்கு இரவு தூக்கம் வர மறுத்தது.


தொடரும்… 

Post a Comment

0Comments
Post a Comment (0)