இன்பா பாகம் - 7 | திருமதி. இராஜதிலகம் பாலாஜி.

| படம் நன்றி: www.webneel.com |


ஏங்க... என் மேல கோபமா இருக்கீங்களா?

ச்சே... ச்சே... உன் மேல எந்தவிதமான கோபமும் இல்ல மலர். என்னை நினைச்சு பார்க்கும்போது என் மேல தன் எனக்கு கோபமா வருது...


அப்படிலாம் எதுவும் பேசாதீங்க... நான் உணர்ச்சி வசப்பட்டு ஏதோ தெரியாம வார்த்தை விட்டுட்டேன். நீங்க எதுவும் வருத்தப்படாதீங்க! என்னை


மன்னச்சிருங்க... என்று தன் கணவனிடம் உதிர்த்த வார்த்தைகளுக்கு மன்னிப்புக் கோரி கொண்டிருந்தார் மலர்விழி.


இதுல நீ மன்னப்பு கேட்க என்ன இருக்கு மலர்? உன்னோட உணர்வுகளையும், பிள்ளைங்களோட உணர்வுகளையும் புரிஞ்சிக்காம, நானும் முட்டாள் தனமா இத்தனை வருஷமா வாழ்ந்துருக்கேனு நினைக்கும்போது மிகப்பெரிய வருத்தமாவும் ஏமாற்றமாவும் இருக்கு.


ஐயையோ! பெரிய பெரிய வார்த்தைகளாம் பேசி என்னை பாவ மூட்டைய சுமக்க வைத்திடாதீங்க! நீங்க எங்களோட உணர்வுகள புரிஞ்சிக்கலனு நான் சொல்லவே இல்லங்க... நாங்க கேட்காமலே எங்களுடைய தேவையைப் பூர்த்தி செஞ்சீங்க. அது மட்டும் இல்லைனு சொன்னா, கடைசி காலத்துல ஒரு வாய் சோறு கூட எனக்கு கிடைக்காம போயிரும்.


ஆனால் ஒரு மனைவியா, நான் உங்கக்கிட்ட எதிர்பார்க்கிறதெல்லாம் உங்களுடைய அன்பையும், எனக்காகவும் பிள்ளைங்களுக்காகவு்ம் நீங்க ஒதுக்கும் நேரத்தை மட்டும் தான்.


எங்க தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, நாங்க ஒருபோதும் கஷ்டப்படக் கூடாதுனு, நேரம் காலம் பார்க்காம ஓடி  உழைச்சு போட்டீங்க. அதையும் மீறி, எங்க எதிர்பார்ப்புனு ஒன்னு இருக்கும்லங்க...."


நீயே சொல்லு மலர்? உங்களுக்குத் தேவையானதை எதுவும் வாங்கித் தராம வெறும் அன்பை மட்டும் கொடுத்துகிட்டே இருந்தா, அப்போ நீங்க என்ன சொல்லிருப்பீங்க.. எவ்வளவு பொறுப்பில்லாம இந்த மனுஷன் இருக்கான் பாருனு பட்டம் கட்டிற மாட்டாங்களா?


என் அப்பா சரியில்லாதனால வாழ்க்கையில ஒவ்வொரு நிமிஷமும் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேனு எனக்கு மட்டும் தான் தெரியும் மலர். அதனால தான் நேரம் காலம் பார்க்காம ஓடி ஓடி சம்பாதிச்சு, என்னை சுத்தி இருக்கறவுங்க கஷ்டப்படக் கூடாதுனு பார்த்துப் பார்த்து கவனிச்சு வந்தேன்.


ரங்கநாதனின் குணம் நன்கு அறிந்தவர் மலர்விழி. பிறரது கருத்தை காது கொடுத்து வாங்கினாலும், அவ்வளவு சுலபமாக எதிர்தரப்பினரின் கூற்றை ஏற்கும் குணமற்றவர் ரங்கநாதன்.


அவருடைய கூற்று ஒரு புறம் சரிதான் என்றாலும், தான் சொல்வதும் குடும்பத்திற்கு முக்கியம் என்பதை, இதற்கு மேலாக எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல், அவருடைய போக்கிலே சென்று அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தார் மலர்விழி.


சரிங்க விடுங்க... உங்க குணம் எனக்கு தெரியாம இல்ல! டக்குனு நீங்க என்னை சொன்னதும் உணர்ச்சி வசப்பட்டுட்டன். மன்னிச்சிங்க... இப்போ இதைப் பத்தி பேசறதுக்கான நேரமில்ல. நாளைக்குப் பொண்ணு பார்க்க போக வேண்டியது இருக்கு. சீக்கிரம் தூங்குங்க... மத்ததெல்லாம் இன்னொரு நாள் பொறுமையா பேசிக்கலாம்...


மறுபதிலேதும் பேசாமல் மௌனமாக தன் படுக்கையில் படுத்து கண்ணை மூடி உறங்க முயற்சி செய்தார். ஆனாலும் ரங்கநாதனின் கண்களில் தூக்கம் வர மறுத்தது.


காலையில் மலர்விழி கேட்ட கேள்விகளும், தான் குடும்பத்திற்காக உழைத்ததை நினைத்து பெருமிதம் கொள்ளாமல், தன்னை பார்த்து எப்படி இப்படியொரு கேள்வி கேட்க மனசு வந்தது என்று சிந்தித்துக் கொண்டே சிறிது நேரத்தில் கண் அசந்தார்.


மறுநாள் பொழுது விடிந்தது. இரு வீட்டாரும் ஒருவரையொருவர் சந்திக்க தேவையான ஏற்பாடுகளை மும்முரமாக மேற்கொண்டிருந்தனர். இளமாறனும், அவனது குடும்பத்தினர் அனைவரும் இன்பாவை பார்ப்பதற்காக காரில் புறப்பட்டனர்.


தொடரும்.... 

Post a Comment

0Comments
Post a Comment (0)