இன்பா பாகம் - 8 | திருமதி. இராஜதிலகம் பாலாஜி.

| படம் நன்றி: www.webneel.com | 


இன்பா, இளமாறனை சந்திக்கும் நாளும் வந்தது. தனது வாழ்க்கைத் துணையாக வரப்போகிறவரைக் குறித்த எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், இனம் புரியாத கவலையோடும் ஒரு வித பயத்தோடும் மிகுந்த வருத்தத்துடன் தன்னை அலங்கரித்துக் கொண்டு இருந்தாள் இன்பா.


பெண் பார்க்கும் படலம் என்பதால், இன்பாவின் வீடு ஒரே கோலாகலமாக இருந்தது.


இன்பா... நீ கொடுத்து வச்சவதான் புள்ள... நம்ம ஜாதி ஜனத்துல இருந்து இதுவரைக்கும் யாருக்குமே பட்டணத்துல இருந்து மாப்பிள வந்ததில்ல புள்ள... என்று அவளுடைய ஒன்றுவிட்ட பெரியம்மா கூறிக் கொண்டிருந்தார்.


இன்பாவைச் சுற்றி, அவளது பெண் பார்க்கும் படலத்தைக் குறித்து, சக தோழிகள், உறவினர்கள் அனைவரும் ஆயிரம் கேளிக்கைப் பேச்சுக்கள் பேசிய எதுவும் இன்பாவின் காதில் விழுந்தது போல தெரியவில்லை.


அவளுடைய சிந்தை முழுவதும் எதிர்கால வாழ்க்கையைக் குறித்து அவளுடைய ஆழ்மனதில் மிகப் பெரிய பயம் ஆட்கொண்டிருந்தது.


தன் தந்தையின் செயலைக் கண்டும், தன்னுடைய தாயை அவர் நடத்தும் விதம் குறித்தும், பெண்கள் என்றாலே அவர்களுக்கு எந்தவித உணர்வுகளும இருக்கக்கூடாது என்றும், வாழ்நாளெல்லாம் தன் சுய விருப்ப வெறுப்பகளை சொல்வதற்கு கூட இடமில்லாமல், தன்னையும் தன் தாயையும் அடிமையாக பார்க்கும் இவரைப் போலத்தானே மொத்த ஆண்வர்க்கமும் இருக்கும் என்று கந்தசாமியின் குணத்தை வைத்து உலகத்திலுள்ள ஆண்களைக் குறித்து எடைப்போட்டு வைந்திருந்ததாள் இன்பா.


ஒருவருடைய குணம் வைத்து ஒட்டு மொத்த உலகத்தையும் தவறாக எண்ணக் கூடாது இன்பா... என்று பாரதி டீச்சர், பெண் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட பாரதியார், பெரியார், ஜான்சி ராணி, காரைக்கால் அம்மையார் போன்ற பல பெருந்தலைவர்களின் வரலாற்றுக் கதைகளையும், அவர்களுடைய சிந்தனைக் கருத்துக்களையும் எவ்வளவு தான் கற்றுக் கொடுத்து புத்திமதி சொல்லி இன்பாவிற்கு அவர் அறிவுரைக் கூறியிருந்தாலும், அக்கிராமத்தில் வீட்டுப் பெண்களை அவ்வூர் ஆண்மகன்கள் நடத்தும் விதம் பார்த்து பார்த்து வளர்ந்தவளுக்கு, திடீரென சில கருத்துகளை ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை. ஆண்கள் என்ற பெயர் கேட்டாலே இன்பாவிற்கு வெறுப்பாக இருந்தது.


இளமாறனுடைய கார் கிராமத்திற்குள் நுழைந்ததும், அக்கிராமத்து குழந்தைகள் அனைவரும் காரின் பின்னாடியே கத்திக் கொண்டும் கூச்சிலிட்டுக் கொண்டும் பின்தொடர்ந்து சென்றனர்.


அக்கிராமத்திற்கு டவுன் பஸ் வருவதைக் கண்டாலே உற்சாக வெள்ளத்தில் துள்ளிக் குதிக்கும் குழந்தைகளுடைய கண்களுக்கு, காரைப் பார்த்ததும் உலக அதிசயத்தை காண்பது போல இருந்தது.


குழந்தைகளின் கூச்சல் சத்தமும், சில குழந்தைகள் மேலாடை இல்லாமல் டவுசரோடு இருப்பதையும் பார்த்த நித்யாவிற்கு மிகுந்த எரிச்சலாக இருந்தது. என்னப்பா ஊரு இது? நான்சன்ஸ்... இப்படி பொறுப்பில்லாம பிள்ளைங்கள வளர்க்கிறாங்க. காருல விழுந்து ஆக்ஸிடன்ட் ஆச்சுனா யாரு பொறுப்பு? என்று கிராமத்து குழந்தைகளின் சைகை கண்டு மிகுந்த எரிச்சலடைந்தாள் நித்யா.


கிராமத்துல பசங்க இப்படி தாம்மா இருப்பாங்க. ஊருக்குள்ள எப்போவாது காரு வந்தா குழந்தைகளுக்கு சந்தோஷம் தாங்க முடியாது. அதெல்லாம் உனக்குப் புரியாது. ரொம்ப நாளாப் பார்க்கனும் ஆசைப்பட்ட ஒரு விஷயத்தை எதிர்பாராத ஒரு நாள் திடீருனு நேருல பார்க்கும் வாய்ப்பு கிடைச்சா அதோட சந்தோஷம் எல்லையில்லாதது நித்யா... என்று ரங்கநாதன் தன் அனுபவத்தை பகிரந்தார்.


ஆனால் நித்யாவோ, தன் தந்தை சொல்லிய எதையும் பெரிதாக எடுத்துக் கொண்டது போல தெரியவில்லை. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இன்பாவின் வீட்டையும் வந்தடைந்தனர்.


இளமாறனை வரவேற்க ஊரே கூடியிருந்ததைப் பார்த்து இளமாறனுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.


இன்பாக்கா... மாப்பிள்ளை வந்தாச்சு..." என்று அக்கூட்டத்திலிருந்து நண்டு சிண்டெல்லாம் கத்திக் கொண்டே இன்பாவின் அறையை நோக்கிச் சென்றனர்.


இன்பாவின் இதயத்துடிப்பு தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கியது.


தொடரும்.... 

Post a Comment

0Comments
Post a Comment (0)