மனித மனங்கள் | மைதிலி ராமையா.

| Image Credit: www.dawn.com |


பதிவுத்திருமணம் முடிந்து வீட்டிற்கு செல்ல கார் இருக்கும் இடம் நோக்கி போய்க் கொண்டிருந்தனர் இலக்கியாவும், ரமேஷும்.



"இலக்கியா! ஒரு நிமிஷம் நில்லு உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்" என்ற ரமேஷ்,



"எங்க அம்மாவுக்கு நான் இப்படி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கறதில துளிக்கூட விருப்பம் இல்லை. என் பிடிவாதத்தால் அரை மனசா சம்மதிச்சிருக்காங்க.



நீயே பாரேன் ஒரே பிள்ளையான என் கல்யாணத்தை நல்லா தடபுடலா நடத்தி கண்குளிர பாக்கனும்னு சொல்லிகிட்டு இருந்தவங்க, இப்ப நீயே பதிவுத் திருமணம் பண்ணிகிட்டு அழைச்சுகிட்டு வா நான் முன்ன நின்னெல்லாம் நடத்த முடியாதுன்னுட்டாங்க" என்று சொல்லும் போதே குறுக்கிட்ட இலக்கியா, 



"என்ன சொல்லப் போறீங்கன்னு எனக்குத் தெரியும். நம்ம காதலை எங்கம்மா ஒத்துகிட்டதே பெரிய விஷயம். பல மாத போராட்டங்களுக்குப் பிறகு இப்பதான் அரை மனதாக சம்மதிச்சாங்க அதுவும் ஏகப்பட்ட கண்டிஷன்களோட. 



நீங்களாகவே பதிவுத்திருமணம் பண்ணிக்குங்க நான் முன்ன நின்னு பண்ணி வைக்க மாட்டேன்னு உறுதியா சொல்லிட்டாங்க. அதனால அவங்க மனசில இடம் பிடிக்கறது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் எப்படியாவது அவங்க மனசை கவர்ந்திழுத்திடு இதுதானே சொல்லப் போறீங்க" என்று அவனைப் போலவே பேசிக் காட்டினாள் இலக்கியா.


"எப்படி அப்படியே நான் பேச நினச்சதை ஒண்ணு விடாம சொல்லிட்ட" என்று விலகாத பிரமிப்புடன் கேட்ட ரமேஷிடம், இல்லாத காலரில் கை வைத்து தூக்கி காட்டிய இலக்கியா



"என்னை என்ன நினச்சீங்க நான் சைக்காலஜி படிச்சவ உங்க மனசை படிச்சமாதிரி உங்கம்மா மனசையும் படிச்சு பக்குவமா நடந்து நம்ம முதல் திருமண நாளை உங்கம்மாவே கொண்டாடும் படி செய்யறேனா இல்லையா பாருங்க" என்றாள் மிடுக்காக.



"இன்னொரு விஷயமும் இருக்கும்மா. நாம வாழப்போற இடம் காலனி வீடு. எல்லாருக்கும் பொதுவா ஒரு கிணறு இருக்கு அங்கதான் எல்லா பொம்பளைங்களும் கூடி தன்வீட்டு, அடுத்தவீட்டு வம்பு தும்புகளை எல்லாம் அலசி காயப் போடுவது வழக்கம்.



அவங்க வாயிலேயும் விழுந்து எழுந்திரிக்காம அவங்களையும் வசப்படுத்தி வச்சுக்கோ" என்றவனிடம், "டோன்ட் வொரி நான் பாத்துக்கறேன்" என்று தெம்பாகச் சொன்னாள் இலக்கியா.



சொன்னதை செயலாக்க மாமியாரை எந்த வேலையும் செய்யவிடாமல் தொலைக்காட்சி பார்க்கும்படியும், வார மாத இதழ்களான பெண்கள் பத்திரிக்கைகளை வாங்கிக் கொடுத்தும், முன் ஹாலிலேயே  அமர வைத்து தேவைகள் அனைத்தும் பார்த்துப் பார்த்து செய்தாள்.



கிட்டத்தட்ட சமையலறையே மறந்துபோகும் அளவுக்கு பார்த்துப் பார்த்து ஓடிஓடி உபசாரம் செய்தாள்.



அக்கம் பக்கம் வீட்டினருடனும் நல்ல நட்பை வளர்த்துக் கொண்டாள். இவள் வயதொத்த வசுமதி, காலனியின் கடைசி வீட்டில் இருப்பவள் இவளுடன் மிக நெருக்கமாகி விட்டாள். 



தன் மாமியாரைப் பற்றி அடிக்கடி குறை கூறிக் கொண்டே இருப்பாள். சில நேரங்களில் கணவரைப் பற்றிய ஆதங்கங்களையும் பகிர்ந்து கொள்வாள் இலக்கியாவிடம்.



"உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எல்லாத்தையும் உங்ககிட்ட தைரியமா ஓபனா ஷேர் பண்ணிக்க முடியுது.  எதையும் யார்கிட்டயும் சொல்றதுமில்லை அநாவசியமாக அடுத்தவங்க வீட்டு விஷயத்தில மூக்கை நுழைக்கறதும் இல்லை. 



இங்க உள்ளவங்க யாரும் அப்படி இல்லை. அன்னிக்கு பாத்தீங்களா என் வீட்டுக்காரர் ஒரு சின்ன சண்டையில கை நீட்டிட்டார். உங்களைத்தவிர எல்லாரும் வந்து கூடிட்டாங்க. எனக்கு எவ்வளவு தர்ம சங்கடமா போச்சு தெரியுமா" என்று ஒருமுறை நேரிடையாகவே இலக்கியாவை புகழ்ந்து தள்ளினாள். 



கணவனிடம் இதைப்பற்றி சொல்லிச் சொல்லி ஆனந்தத்தில் துள்ளினாள் இலக்கியா.



முதலாம் ஆண்டு திருமணநாள் நெருங்கிக் கொண்டிருந்த போது ஒருநாள் இலக்கியாவும், ரமேஷும் திரைப்படம் பார்ப்பதற்காக புறப்பட்டுச் சென்றனர்.



பாதி வழி சென்றதும்தான் கைப்பையை வீட்டிலேயே விட்டு விட்டு வந்தது நினைவுக்கு வந்தது அவளுக்கு. அதில்தான் கைபேசி, பர்ஸ் எல்லாம் இருந்தது. திரையரங்கில் முன்பதிவு செய்த டிக்கெட்டுக்கு ஃபோன் அவசியம்.



எனவே பாதியிலேயே திரும்பும்படி ஆனது. வீட்டு வாசலில் வண்டியில் ரமேஷ் காத்திருக்க, விரைவாக உள்ளே செல்ல காலடி எடுத்து வைத்தவள், வீட்டின் உள்ளிருந்து பலரின் பேச்சுக்குரல் அதிலும் குறிப்பாக அவள் பெயர் கேட்கவே வெளியிலேயே நின்றுவிட்டாள்.



மனைவியைக் காணுமே என தேடி வந்த ரமேஷும் அங்கேயே நின்றுவிட்டான்.



"மருமக உட்கார வச்சு கவனிக்கிறா கொடுத்து வச்சவதான் நீ" என பக்கத்து வீட்டு பாட்டி சொல்ல,



"நீங்கதான் மெச்சிக்கனும் வந்த அன்னிக்கே இதை அவ வீடு ஆக்கிட்டா என்னை ஹாலோட முடக்கி, தனக்குத் தானே வீட்டுத் தலைவின்னு பட்டம் கட்டிகிட்டா" என்று மாமியார் பதிலுரைக்க, 



"ஆமாமாம் தப்பா எடுத்துக்காதீங்க கொஞ்சம் தலைக்கணம் பிடிச்சவளாத்தான் தெரியறா. யாரோடயும் குளோஸா பழகறதேயில்லை அன்னிக்கு பாத்தீங்களா என்வீட்டுக்காரர் என் மேல கை வச்சுட்டார்ன்னு நீங்கள்ளாம் பதறிப் போய் ஓடி வந்தீங்களே, அவ எட்டிக்கூட பார்க்கலை கவனிச்சீங்களா இன்னிக்கு வரைக்கும் என்ன சண்டைன்னு ஒரு ஆறுதலுக்குக் கூட கேக்கலையே" என அங்கலாய்த்தவள் சாட்சாத் கடைசிவீட்டு வசுமதியேதான்.



என்னம்மா சைக்காலஜி! என ரமேஷ் கிண்டல் செய்தது காதில் விழுமுன், இலக்கியா சின்ன மயக்கத்திற்குள் போய்விட்டாள்.



எத்தனை புத்தகங்கள் படித்து எத்தனை பட்டங்கள் வாங்கி என்ன,படிக்க முடியாத பக்கங்களாக அல்லவா மனித மனங்கள் இருக்கின்றன.



ஆனாலும் பொறுமை என்னும் சின்ன ஆயுதத்தால் ஒட்டிய பக்கங்களை பக்குவமாகப் பிரித்து, படித்து வாழ்க்கைப் பரிட்சையிலும் வென்று காட்டுவேன். நல்ல மருமகள் என்ற பட்டமும் பெறுவேன். உன் தேர்வு தவறல்ல என்று சொல்லவும் வைப்பேன் என்ற உறுதியை மீண்டும் கணவன் காதுக்குள் ஓதினாள் இலக்கியா.



- மைதிலி ராமையா. 

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)