“மனங்களைப் பிரித்த அறிவியல்" | ஸ்ரீவித்யா பசுபதி

Image Credit: DALL-E AI.
“யப்பா பாலு… இந்த மொபைல் என்னவோ சத்தமே வர மாட்டேங்குது பா. என்னன்னு கொஞ்சம் பார்க்கறியா?” “என்னப்பா நீங்க... கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடறீங்களா? இப்போ தான் வேலைல இருந்து வீட்டுக்கு வந்தேன். அதுக்குள்ள மொபைல் சரியில்லங்கறீங்க. 

தினமும் ஏதோ ஒண்ணு நச்சறீங்க. அதை ஒழுங்காவே வச்சுக்கத் தெரியலப்பா” “எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லையே பாலு. அதனால தெரியாம எதையோ அழுத்திடறேன். பழகிட்டா உன்னைத் தொந்தரவு பண்ண மாட்டேன்.”


“இவ்ளோ வயசுக்கு அப்புறம் உங்களுக்கு இதெல்லாம் தேவையா? அக்காவுக்கு உடம்பு முடியலன்னு பார்த்துக்கறதுக்காக அம்மா ஊருக்குப் போயிருக்காங்க. அம்மாகிட்ட சாதா ஃபோன்லயே பேச வேண்டியதுதானே?வீடியோ கால்ல தான் பேசணுமா?


வீடியோல பார்த்துப் பேசணும்னு நீங்க சொன்னதால புது ஃபோன் வாங்கிக் கொடுத்தேன். ஃபோன் வாங்கிக் கொடுத்த இந்த ஒரு வாரமா தினமும் நான் வேலை முடிச்சு வந்ததும், ஃபோன்ல அது சரியில்ல, இது வரல, அது எப்படி, இது எப்படின்னு நச்சிட்டே இருக்கீங்க பா. தொல்லையாப் போச்சு.”


“வயசானவங்களைத் தொல்லையா தான் நினைக்கறீங்க. புதுசா வர தொழில்நுட்பங்களை வயசானவங்களுக்கு சொல்லிக் கொடுக்க உனக்கெல்லாம் பொறுமை இல்லை.


பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்குப் போயிருக்கற உன் மனைவிகிட்ட வீடியோகால்ல நீ பேசறே. என் மனைவிகிட்ட நான் பேசக் கூடாதா? இந்த அறிவியல், தொழில்நுட்பம், ஃபோன் வீடியோகால் இதெல்லாம் இளம் வயசுக்காரங்களுக்கு மட்டும் தானா?


எவ்வளவு வயசானாலும் எனக்கு அவளும், அவளுக்கு நானும்னு பார்த்துப் பார்த்து இருந்துட்டோம். அவ இல்லாம எனக்கு இங்கே கையொடிஞ்ச மாதிரி இருக்கு. உங்க அம்மாவுக்கும் அப்படித்தான் இருக்கும். ஏதோ வீடியோல பார்த்துக்கிட்டா கொஞ்சம் நிம்மதியா இருக்குமேன்னு உன்கிட்ட கேட்டேன்.


எதை எப்படி உபயோகிக்கணும்னு எனக்குத் தெரியாது. பொறுமையா சொல்லிக் கொடுத்தா கத்துக்கப் போறேன். அதுக்கு உனக்கு நேரம் இல்லை. சின்ன வயசுல, நான் சைக்கிள் ஓட்டிட்டு வேலைக்குப் போய் வரதைப் பார்த்துட்டு, நீயும் சைக்கிள் வேணும்னு அடம்பிடிச்சே. சரின்னு கஷ்டப்பட்டு சைக்கிள் வாங்கிக் கொடுத்தேன்.


நான் தினமும் ஒன்பது மணிக்கு ஆஃபீஸ்ல இருந்து வந்த பிறகு சைக்கிள் ஓட்டணும்னு அடம்பிடிப்பே. தினமும் ராத்திரி பத்து மணிக்கு, நீ சைக்கிள் ஓட்டும் போது அதைப் புடிச்சுகிட்டு உன் பின்னாடியே நானும் ஓடி வருவேன்.


நானும் வேலைக்குப் போயிட்டு தான் வந்தேன். ஆனாலும் என் மகனுக்கு ஒரு விஷயத்தைக் கத்துக் கொடுக்கணும்னு ஆர்வம் எனக்கிருந்துது. அன்பு தான் எனக்குப் பெருசாத் தெரிஞ்சுது.


வேலைக்குப் போயிட்டு வந்த அசதியை நான் பெருசா நினைக்கல. உனக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுக்கறதை தொல்லையா நினைக்கல. ஆனா இந்த மொபைல் உபயோகிக்கறதை உட்கார்ந்த இடத்துல சொல்லிக் கொடுக்கறது உனக்குத் தொல்லையா இருக்கு.


அறிவியல் வளர்ந்தா என்ன... நீங்க எல்லாம் என்ன படிச்சா என்ன...? மனசால எல்லாம் விலகித் தான் போறீங்க. நினைச்ச நேரத்துல பேச ஃபோன் வசதி இல்லாத காலத்தில் கூட உறவுகள் மனசால இணைஞ்சிருந்தாங்க.


இப்போ வெறும் ஃபோன்ல தான் இணைஞ்சிருக்கீங்க. மனசால ஒதுங்கிப் போயிட்டீங்க. இனிமேல் இந்த ஃபோனை வச்சுக்கிட்டு உன்னைத் தொல்லை பண்ண மாட்டேன். நான் என் மனைவிகிட்ட சாதா ஃபோன்லயே பேசிக்கறேன். இதை நீயே வச்சுக்கோ.”


பன்னிரண்டாயிரம் ரூபாய் போட்டு வாங்கிக் கொடுத்த கைப்பேசியை தன் மகனிடமே திரும்பக் கொடுத்துவிட்டு, தன் பழைய சாதாரண ஃபோனில் தன் மனைவிக்கு அழைப்பு விடுத்தார் கதிரேசன்.


குற்ற உணர்வோடு தன் மனைவிக்கு வீடியோகால் செய்தான் பாலு.


- ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை. 

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)