சித்திரை மகளே!
சீர்மை கொண்டு வருக! - நின்
சீர்மிகு வரவால் இவ்வையம்
சிறக்க அருள்க!
நித்திரை நீங்கி
நினைத்ததை வென்றிடச் செய்க!
நிம்மதி யாவர் நெஞ்சிலும்
நிலைத்திடச் வைக்க!
சித்திரை மகளே
சிர்மை கொண்டு வருக!
சிந்திய கண்ணீர் மாற்றி
சிரிப்பை முகத்தில் தருக!
முந்திய செயல்கள் யாவும்
முடித்திட செல்வம் தருக!
அந்தியிலுதித்த குளிர் நிலவாய்
ஆனந்தம் அள்ளித் தருக!
சிந்தையில் தெளிவை ஊட்டி
விந்தைகள் நிகழ்த்த வருக!
சித்திரை மகளே
சீர்மை கொண்டு வருக!
நம்பிய நெஞ்சில் நலமே
நல்கிட வருக!
வம்புகள் வந்த வழிகள் மாற்றி
வசந்த மலர்கள் பூக்க
எங்கும் எதிலும் மகிழ்ச்சி
மணமே மணக்க!
பொங்கும் உள்ளம் புன்னகைப்
பூவாய்ப் சிரிக்க!
மனங்களில் எல்லாம்
மனித நேயம் விளங்க!
சித்திரை மகளே
சீர்மை கொண்டு வருக!
கவிஞர் திருமதி விஜயாமுத்துக்குமாரசாமி