இன்பா பாகம் - 10 | திருமதி. இராஜதிலகம் பாலாஜி.

படம் நன்றி : webneel.com


பாரதி டீச்சர் வெறித்துக் கொண்டு முறைத்துப் பார்த்த கந்தசாமி, சபையினர் முன்பு ஏதும் காட்டிக் கொள்ளாமல் வந்தவரை நாசுக்காக "வாங்க டீச்சர்...." என்று போலியான புன்முறுவலுடன் வரவேற்றார்.


பதிலுக்கு பாரதி டீச்சரும், புன்முறுவல் செய்துவிட்டு இன்பாவின் அறையை நோக்கி வேகமாகச் சென்றார்.



"டீச்சர்..." என்று பாரதி டீச்சரைக் கண்டதும் கண்கலங்கி கட்டியணைத்து தன் மனவேதனையை ஆற்றிக் கொண்டாள்.



வயது அறுபதைக் கடந்தவர் என்பதோடு மட்டுமல்லாமல், இன்பாவின் மனதை நன்கு படித்து புரிந்து வைத்திருப்பவர் பாரதி டீச்சர். அவளுடைய அழுகைக்கான காரணத்தை இன்பா வாய்விட்டு சொல்லும் முன்னே அவரால் யூகிக்கும் முடியும் அளவிற்கு அவர்களுடைய பந்தம் புனிதமானது.



"இன்பா, இங்கப் பாரு. உனக்கு ஒரு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கேன்" என்று கூறியவர், தன் ஹேன்பேக்கிலிருந்து ஒரு செய்தித் தாளை எடுத்து அவளிடம் காட்டினார்.




"டீச்சர்... என்னால நம்பவே முடியல. இது நிசம் தானா..." என்று இன்பாவின் துக்கக் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மாறியது.




"பொண்ணை அழைச்சிட்டு வாங்கம்மா..." என்று அங்கிருந்த பெரியவர்கள் கூறவும், இன்பாவை அழைக்க வந்தனர்.



டீச்சரின் வருகைக்கு முன்னர் வரை தயக்கத்துடன் இருந்த இன்பாவின் மனது, இப்போது ஆயிரம் மடங்கு பலம் பெற்றது போல நம்பிக்கை வந்தது.



"தைரியமா போ இன்பா..." என்றார் பாரதி டீச்சர்.



இன்பாவை பின்தொடர்ந்து பாரதி டீச்சரும் கூடவே சென்று ஒரு தூணின் ஓரத்தில அங்கு அடுத்து நடக்க இருப்பதை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்.



இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடம்பரமில்லாத பட்டுப்புடவை அணிந்து, தலையில் ஓரளவு மல்லிகைப் பூ சூடியிருந்தாள். பெண்களுக்கான சராசரி உயரத்தோடு, மாநிறத்தில் இருந்தாள்.



"கிராமத்துப் பெண் என்பதால் தலைகுனிந்து வருவாள்..." என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த இளமாறனின் வீட்டாருக்கு மட்டுமல்லாது அங்கு வந்திருந்த கிராம மக்களுக்கும், கந்தசாமிக்கும் மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.


     

இன்பா சபையினர் முன்பு வந்து நின்றதும், கூட்டத்திலிருந்த பாட்டி "ஏப்புள்ள இது என்ன புது பழக்கமா இருக்கு? ஆம்பளைங்க முன்னாடி நிமிர்ந்து நிக்கறவ..." என்றார்.


மறுபதிலேதும் கூறாமல், அந்தப் பாட்டியை முறைத்துக் கொண்டே, தன் தந்தையின் அருகிலிருந்த இருக்கையில் போய் பேசாது அமர்ந்து கொண்டாள்.



கிராமத்து பெண்கள் என்றாலே வேறுவிதமாக கற்பனை செய்து வைத்திருந்த நித்யா, "வாவ்.... பொண்ணு சூப்பர்ப்பா..." என்றாள்.



இன்பாவின் செய்கை கண்டு இளமாறனின் மனதிலும் ஒருவித அச்ச உணர்வு ஏற்படத் தொடங்கியது.



ரங்கநாதனும்,மலர்விழியும் அமைதியாக இன்பாவை கவனித்துக் கொண்டிருக்கையில், "எனக்கு பொண்ணு ரொம்ப பிடிச்சிருக்கு.  "பொண்ணும் மாப்பிள்ளையும்  ஒருத்தருக்கொருத்தர் கொஞ்சம் தனியா பேசட்டும்..." என்றாள் நித்யா.



உடனே அங்கிருந்த பாட்டி, "இது என்னங்கடி புது கூத்தா இருக்கு? எங்க காலத்துல பொம்பளைங்க, கல்யாணம் முடிக்கறதுக்கு முன்னாடி ஆம்பளைங்கள நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டோம். தாலிக் கெட்டுனதுக்கு பொறவு தான் புருஷன் முகத்தையே பார்ப்போம்... பெத்தவுக யாருக்கு கழுத்த நீட்டச் சொல்லுறாங்களோ, அவுங்களுக்கு கழுத்த நீட்டறது தான் வழக்கம்... " என்றார்.



"உங்கக்கிட்ட நான் ஒரு அஞ்சு நிமிஷம் பேசனும்" என்று இன்பா கூறிக் கொண்டிருக்கும் போது, "அதுக்கு முன்னாடி, மாப்பிள்ளை சாருகிட்ட நான் பேசனும்..." என்று மற்றொரு பெண்ணின் குரல் அதிகாரத் தோணியில் ஒலித்ததும், கிராம மக்களோடு சேர்ந்து இளமாறனின் குடும்பமும் அவர் யாரென்று திரும்பிப் பார்த்தது.



தொடரும்....

Post a Comment

0Comments
Post a Comment (0)