இன்பா பாகம் - 9 | திருமதி. இராஜதிலகம் பாலாஜி.

படம் நன்றி : webneel.com


இளமாறனின் குடும்பத்தை வரவேற்க, அக்கிராமமே வீட்டின் வாசலில் கூடி நின்றது.



"அப்பா... என்னப்பா இதெல்லாம்? அண்ணணுக்கு பொண்ணு பார்க்கத்தான வந்திருக்கோம். என்னமோ கல்யாணம் முடிக்க வந்திருக்க மாதிரி இவ்வளவு கூட்டம் இருக்கு" என்று தன்  தந்தையின் காதோரம் சென்று முணுமுணுத்தாள்.


"இங்க கிராமத்தில் ஒரு வீட்டுல ஏதாவது விஷேம்னா மொத்த கிராமமும் ஒன்னு கூடறது வழக்கம் தான் நித்யா."



"ஒன்னும் சொல்லுறதுக்கில்ல..." என்று கூறியவள் அங்கு வந்திருந்த அனைவரையும் நோட்டம் விட்டாள்.


"வாங்க... வாங்க..." என்று கந்தசாமியும் அவருடைய உறவினர்களும் அவர்களை வரவேற்று வீட்டிற்குள் அழைத்தனர்.



"ஏய்யா....கோட்டு, சூட்டு போட்டு, கண் ஆப்ரேஷன் செஞ்சா கொடுக்கற கருப்பு கண்ணாடிய போட்டிருக்கறது தான் மாப்பிள்ளையாக்கும்..." என்று இளமாறனைக் குறித்த அடையாளங்களைச் சொல்லி விசாரித்துக் கொண்டிருந்தார் இன்பாவின் பாட்டி.



"ஏய் பாட்டி... சும்மா கெட... அது ஒன்னும் ஆப்ரேஷன் செஞ்சா போடற கருப்பு கண்ணாடி கிடையாது. பட்டணத்துல இருக்கறவங்க சில பேரு பெரும்பாலும் வெயிலு கண்ணுல பட்டு கூசக் கூடாதுனு போடறது..."



"அடியாத்தி... இது என்ன புது கூத்தா இருக்கு? வெயிலு உடம்புலையும் கண்ணுலையும் பட்டா தானே சௌகரியமா இருக்க முடியும்..."


"பட்டணத்துல எல்லாம் அப்படி தான் பாட்டி. நீ செத்த நேரம் அமைதியா இரு. மாப்பிள வீட்டுகாரவுங்க காதுல எதுவும் விழுந்தற போது..." என்று இன்பாவின் பெரியப்பா மகள் தமிழினி கூறிக் கொண்டிருந்தாள்.




இன்பாவின் அறைக்கு வேகமாக ஓடி வந்த தமிழினி, "இன்பா... மாப்பிள்ளை நல்ல கலரா, பனை மரத்துல பாதி உசரத்துல ஆளு பார்க்க வாட்ட சாட்டமா இருக்காரு புள்ள..." என்றாள்.


பதிலேதும் பேசாமல் தலையைக் குனிந்தவாறு இருந்த இன்பாவின் முகத்தைப் பிடித்து நிமிரச் செய்தாள் தமிழினி.


"ஏம்புள்ள கண்கலங்கியிருக்கு? எப்படினாலும் அடிமை வாழ்க்கைனு உறுதியாகிருச்சு. இதுல மாப்பிள்ளை அழகு ஒன்னு தான் முக்கியமா அக்கா?"


"ஏன் இன்பா இப்படி பேசறவ?"


"நீ கல்யாணம் முடிச்சு போன, உனக்கு உன் வீட்டுல எல்லாம் உரிமையும் கிடைக்குதா? கல்யாணம் முடிஞ்சப் பிறக பெத்த ஆத்தா, அப்பன் வீட்டுக்கு வரனும்னாலும் உன் வீட்டுக்காரர் உத்தரவு கொடுத்தா தான இங்க வர முடியும்."



நமக்கு பிடிச்ச மாதிரி எப்பவும் வாழுறதுக்கு இங்க அனுமதி கிடையாது. பொம்பளைங்கனா இப்படித்தான் இருக்கனும்னு சொல்லிச் சொல்லி நம்மளோட உணர்வை மண்ணோட மண்ணா புதைச்சிட்டாங்க.


இந்த சம்பந்தம் ஒத்துப் போய் ஒரு வேளை எனக்கு கல்யாணம் முடிஞ்சாலும், அது ஒன்னும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போறதில்லசெய்தில சொல்வாங்கள, கைதீங்கள ஒரு சிறையில இருந்து வேறொரு சிறையில கொண்டு போய் அடைச்சுப் போடுவாங்கள... அந்த மாதிரி தான் இதுவும்.


  

பிறந்த வீட்டு சிறை வாழ்க்கையில இருந்து புகுந்த வீட்டு சிறை வாழ்க்கைக்கு மாத்துறது" என்று இன்பா கூறுவதைக் கேட்டதும், தமிழினியிமிருந்து எந்தவிதமான ஆதரவான வார்த்தைகளைக் கூறி அவளைச் சமாதனப்படுத்த முடியாமல், இன்பாவின் நிதர்சனமானப் பேச்சை நினைத்து வாயடைத்து அமைதியாகிவிட்டாள்.



"முதல்ல பொண்ண வரச் சொல்லுங்க... அடுத்து பேச வேண்டியதை பேசலாம்" என்றார் அங்கிருந்த கிராமத்து தலைவர்.


அவர் சொல்லும் போதே பாரதி டீச்சர் அங்கு வருகை தந்தார். அவரைப் பார்த்ததும், "சுத்தம்... இன்னைக்கு இந்த சமபந்தம் நடந்த மாதிரி தான்" என்று கந்தசாமி முணுமுணுத்தார.



தொடரும்...

Post a Comment

0Comments
Post a Comment (0)