இன்பா பாகம் - 4 | திருமதி. இராஜதிலகம் பாலாஜி.

| Image Credit: webneel.com |


பாரதி டீச்சரின் வீட்டிலிருந்து கிளம்பிய  இன்பாவின் மனமானது, ஏதோ ஒரு விதமான குழப்பத்திலிருந்தது.

 

            எப்போதும் இன்பாவின் குழப்பத்தை சரி செய்து, வாழ்க்கைக்கு தேவையான ஆலோசனையை வழங்கி, இன்பாவிற்கு சரியான வழிகாட்டியாக இருப்பவர் தான் பாரதி டீச்சர்.

 

   அகவை அறுபதை கடந்தவர். அவரும் அவருடைய கணவரும் அரசு பள்ளியில் தமிழாசிரியாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். நான்கு வருடத்திற்கு முன்பு தான் இன்பாவின் சொந்த ஊரான பூஞ்சோலை கிராமத்திற்கு வந்து குடிபெயர்ந்தனர். பூஞ்சோலை கிராமத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தற்குக்கான காரணம் என்னவெனில், பாரதி டீச்சருடைய தாத்தா, பாட்டி வாழ்ந்த ஊர் தான் இந்த பூஞ்சோலை கிராமம்.



   பாரதி டீச்சருக்கு கிராம வாழ்க்கை மீது அளவுக்கு அதிகமான பிரியம். ஆனால் அவருடைய பெற்றோர்கள் அனைவரும் படித்து வேலை கிடைத்ததும், நகரங்களுக்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டனர்.

 

   பள்ளி விடுமுறையின் போது மட்டும் தான் தாத்தா பாட்டியை பார்க்க வருவது வழக்கமாக இருந்தது. பிற்காலத்தில் அவர்களுடைய மறைவிற்கு பின்னர் கிராமத்திற்கு வருவது முற்றிலும் இல்லாது போய்விட்டது.




   பாரதி டீச்சரின் கணவர் லோகநாதன். தன்னுடைய மனையாளின் உணர்விற்கு மிகுந்த மதிப்பளிப்பவர். அதனால் தங்கள் கடமைகள் முடிந்ததும், ஓய்வெடுக்கும் காலத்தில் பூஞ்சோலை கிராமத்தில் வந்து, தங்களுடைய கடைசி காலத்தை மன அமைதியும், நிம்மதியும் நிறைந்திருக்கும் இயற்கையின் புத்துணர்ச்சியும் மண் வாசமும் மாறாத பூஞ்சோலை மண்ணில் தான் கடைசி நாட்கள் வாழ வேண்டும் என்று அவர்களது திருமணமான புதிதிலே முடிவெடுத்து விட்டனர்.



   தங்களுடைய கடைசி காலத்தை கிராமத்திலும், கிராமத்திலுள்ள குழந்தைகளுக்கும் தங்களால முடிந்தளவு கல்வி கற்றுக் கொடுத்து அவர்களுக்கு தேவையான தங்களால் முடிந்த உதவி செய்யவும், கல்வி கற்க வேண்டியதன் விழிப்புணர்வைப் பற்றி பேசவும், அவர்களுக்கு வழிகாட்டுவதற்காகத் தான் இங்கு வந்து குடிபெயர்ந்தனர்.



   இவர்களுடைய வருகை கிராமத்திற்கு மட்டுல்ல, இன்பாவிற்கு தான் பெரு மகிழ்ச்சியை அளித்தது.

 

   இன்பாவை பள்ளிப் படிப்பிற்கு மேல் படிக்க வைக்க முடியாது என்று அவளுடைய தந்தை முரட்டுப் பிடிவாதமாக இருந்தார்.



மெதுவாக பேசி பேசி அவருடைய மனதை கரைய வைத்து இன்பாவை B.A என்ற பட்டதாரியாக மாற்றி, அவளுக்கு சிறந்த ஆசானாகவும் தோழியாகவும் இருந்து வழிகாட்டியது பாரதி டீச்சர் தான்.



   இன்பா படிக்கத் தொடங்கியதும் பல விதமான எதிர்தரப்பு கேள்விகளை கேட்கத் தொடங்கியது கந்தசாமிக்கு பிடிக்கவில்லை.



            இதற்கெல்லாம் காரணம் அந்த டீச்சர் தானே என்று பாரதி டீச்சர் மீது தீராத கோபத்திலிருப்பவர் தான் கந்தசாமி.



            இன்பா ஒன்றும் அவ்வளவு எளிதாக இந் பட்டதாரி பட்டத்தை பெற்று விட வில்லை. கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து படிக்கும் வழியை காட்டி, அவளுக்குப் படிக்க தேவையான வசதிகளையும் புத்தகங்களையும்ம வாங்கி கொடுத்து படிக்க உதவி செய்தவர் பாரதி டீச்சர்.



   பாரதி டீச்சர், கந்தசாமியின் வெறுப்பை சம்பாதிக்க காரணம் இது தான்.

 

   தினமும் கந்தசாமி வீட்டில் இல்லாத போது டீச்சர் வீட்டிற்கு செல்வது வழக்கம். அவர் உலகத்தைக் குறித்தும், புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும் என்றும், பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதையும் ஏட்டுக் கல்வியோடு வாழ்க்கை கல்வியும் சேர்த்தே இன்பாவிற்கும், இன்பா வயதை ஒத்த பெண் பிள்ளைகளுக்கு கலங்கரை விளக்காக திகழ்ந்து வந்தவர் தான் பாரதி டீச்சர்.

 

   மாலை நேரம் கிராமத்து குழந்தைகளுக்கு டியூசன் எடுப்பது, இலவச நூலகம் அமைத்து அதன் மூலமாக வாசிப்பு பழக்கத்தை குழந்தைகளிடம் கொண்டு செல்வது, கிராமத்து குழந்தைகள் உதவியுடன் அங்குள்ள மக்களின் தேவையை அறிந்து, அவர்களால் இயன்ற அளவு உதவி செய்வது என்று தங்களுடைய கடைசி காலத்தை சேவை நோக்கத்தில் செயல்படுகின்றனர்.

 

            இன்பா தலையைச் சொறிந்து கொண்டே வீட்டிற்குள் நுழையும் போது கந்தசாமி வாசலில் நின்று கொண்டிருந்தார்.



தொடரும்

Post a Comment

0Comments
Post a Comment (0)