கதம்பம் | ஸ்ரீவித்யா பசுபதி


சென்னை மாநகரத்தின் பரபரப்பு மிகுந்த காலை நேரம். சாலைகளைக் கூட்டி சுத்தப்படுத்தி, குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள் மாநகராட்சி ஊழியர்கள். 


ஏற்கனவே குப்பைத் தொட்டியில் இருந்த குப்பைகளைத் தரம் பிரித்து, அவற்றைத் தனித்தனியாகப் போட்டு, குப்பைகளை ஏற்றிச் சொல்லும் வண்டியில் அடுக்கிக் கொண்டிருந்தார்கள் இன்னும் சிலர்.


சாலையில் சற்று தொலைவில் திடீரென பரபரப்பு. நடந்து சென்று கொண்டிருந்த ஒரு சிலர் அங்கு கூடத் தொடங்கினர். இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணித்துக் கொண்டிருந்தோர் அதைக் கண்டும் காணாமல் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.


மாநகராட்சி ஊழியர்களுக்கும் இது பழகிப்போன ஒன்றுதான் என்பதால் யாரும் அதைப் பெரிதுபடுத்தாமல் தங்கள் வேலைகளைத் தொடர்ந்தனர். தரம்பிரித்த குப்பைகளை மூன்று சக்கர வாகனத்தில் அடுக்கிவிட்டு வாகனத்தை அங்கிருந்து கிளப்பினாள் மல்லிகா. சீரான வேகத்தில் சென்றவள், கூட்டம் கூடியிருந்த இடத்தைக் கடக்கும் போது மனசு கேட்காமல் வேகத்தை சற்று குறைத்து என்ன நடந்தது என விசாரித்தாள்.


"ஒரு அம்மா வண்டில இருந்து கீழே விழுந்துட்டாங்க. நாய் குறுக்கால வந்ததால தடுமாறி விழுந்துட்டாங்க. மயக்கமாயிட்டாங்க. ஆம்புலன்ஸுக்குத் தகவல் சொன்னோம். பதினஞ்சு நிமிஷத்துல வரதா சொல்றாங்க.”


அங்கே கூட்டமாக நின்றிருந்தவர்கள் ஒவ்வொருவராக நழுவ ஆரம்பித்தார்கள். அந்த இடத்தைத் தாண்டிச் சென்ற மல்லிகாவுக்கு ஏனோ மனம் கலங்கியது. குப்பை வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி வந்தாள்.


கிட்டத்தட்ட மல்லிகாவின் வயது தான் இருக்கும் அந்தப் பெண்மணிக்கும். எங்கேயோ பார்த்தது போல் பழக்கமான முகம். மல்லிகா யோசித்தபடியே அந்தப் பெண்மணியின் கையில் இருந்த மச்சத்தைப் பார்த்ததும் பரபரப்பானாள்.


சட்டென்று தன் குப்பை வண்டியில் இருந்த குப்பைத் தொட்டிகளை ஓரமாக நகர்த்தி இடம் செய்து, மயக்கத்திலிருந்த பெண்மணியை வண்டியில் அள்ளிப் போட்டுக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு விரைந்தாள்.


மல்லிகாவின் இந்தச் செயலைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற மாநகராட்சி ஊழியர்கள் அவள் பின்னாலேயே மருத்துவமனைக்கு வந்தார்கள். அதற்குள் மல்லிகா அந்தப் பெண்மணியை அங்கே அனுமதித்திருந்தாள். மருத்துவர்கள் முதலுதவி செய்து கொண்டிருந்தார்கள்.


"ஏய் மல்லி... என்ன பண்றே நீ? மயக்கத்துல இருக்கற அந்த அம்மாவைக் குப்பை வண்டில அள்ளிப் போட்டுட்டு வந்துட்டே. ஏதாவது பிரச்சனைல மாட்டிக்கிட்டா கோர்ட்டு கேசுன்னு உன்னால அலைய முடியுமா? இல்ல இப்போ ஆஸ்பத்திரில பத்தாயிரம் இருபதாயிரம்னு பணத்தைக் கேட்டா உன்னால கொடுக்க முடியுமா? பேசாம உன் வேலையைப் பார்த்துட்டுப் போக வேண்டியது தானே...”


“இல்ல செண்பகம், அடிபட்டு மயங்கிக் கிடந்தது என்கூட பள்ளிக்கூடத்துல ஒண்ணாப் படிச்ச என் தோழி கனகா தான். அவளாலத்தான் நான் பத்தாப்பு வரைக்குமாவது படிச்சேன். 


என்னையும் அவளையும் சேர்த்து கதம்பம்னு தான் பள்ளிக்கூடத்துல கூப்பிடுவாங்க. என்ன செய்யறது... என் குடும்பச் சூழ்நிலை.. நான் இந்த வேலைக்கு வந்துட்டேன். 


அவ மேல படிச்சு நல்ல நிலைக்கு வந்துட்டா.


இவ்வளவு வருஷம் கழிச்சு அவளை இப்படியொரு நிலைமைல பார்ப்பேன்னு கனவுல கூட நினைச்சதில்ல. அவளை எப்படியாவது காப்பாத்தணுங்கறது மட்டும் தான் எனக்குத் தோணிச்சு செண்பகம். கோர்ட்டு, கேசு, செலவு இதெல்லாம் எனக்குத் தெரியல செண்பகம்.


அவ நட்பு மட்டும்தான் கண்ணு முன்னாடி வந்துச்சு. அதான் எதையும் யோசிக்காம குப்பை வண்டில அள்ளிப் போட்டுட்டு வந்துட்டேன். அவ நல்லபடியா கண்ணு முழிச்சாப் போதும் செண்பகம்.”


ஏய் மல்லி... உன் நட்பு அவங்க உசுரக் காப்பாத்திடும். கவலைப்படாதே.”


தன் தோழி கண் விழிக்கக் காத்திருந்தாள் மல்லிகா.


- நட்புடன் ஸ்ரீவித்யா பசுபதி. 

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)