இன்பா இறுதி பாகம். | திருமதி. இராஜதிலகம் பாலாஜி.

படம் நன்றி : webneel.com


ஏய்... என்னடி இது புதுசா குரலை உசத்திப் பேசறவ? உனக்கு புத்தி எதுவும் மழுங்கிப் போச்சா?" என்று கோபத்தில் கொந்தளிக்கத் தொடங்கினார்.



"ஆமாய்யா... புத்தி மழுங்கிப் போய் தான் இத்தனை நாளும் உங்க கூட குடும்பம் நடத்தி பிள்ளைகளை பெத்துக்கிட்டேன்."



"வாயை மூடிட்டு பேசாம போயிரு. இல்லாட்டி நடக்கறதே வேற..."



"எந்த ஊருலேயாவது இப்படி ஒரு கேடு கெட்ட தகப்பன் இருப்பானாய்யா? பெத்த பிள்ளைய தெரிஞ்சே ஒரு தகப்பன் பாலங்கிணத்துல தள்ளுவானா? நீயெல்லாம் மனுஷ ஜென்மம் தானா? பத்து மாசம் புள்ளைய சுமந்து பெத்திருந்தால்ல புள்ளையோட அருமை உனக்குத் தெரியும்.



என் வயித்துல பிறந்த பாவத்துக்காக, என் மகள் ஏற்கனவே உங்கிட்ட இருந்து நிறையா அனுபவிச்சிட்டாள். சரி பட்டணத்துல இருக்கற மனுசங்களாவது நல்லவுங்களா இருப்பாங்கனு நினைச்சு தான், இந்த சம்பந்தம் வந்தப்போ வாயைத் திறக்கம்ம இருந்தேன்.



அங்கேயும் பொம்பளைங்களோட உணர்வுக்கு மதிப்பு கிடையாது செத்த நேரத்துக்கு முன்னாடி அழுது புலம்பிட்டு போன பொண்ண வச்சு தான் தெரிஞ்சுக்கிட்டேன்.


ஒரு பொண்ணை முதல்ல மனுஷியா நினைக்க பாருய்யா. எங்களுக்கும் உங்கள மாதிரி உணர்வெல்லாம் இருக்கு."



"ஐயோ! இன்பா... என் இராசாத்தி... உனக்கு ஒரு நல்ல காலம் கிடைக்கனும்னு நெதமும் கோவிலுக்குப் போயிட்டு வந்தேன். அந்த சாமிக்கு கொஞ்சம் கூட கருணை இல்லையே. பொண்ணு மனசு ஒரு பொண்ணுக்குத்தான தெரியும்னு சொல்வாங்க. அம்மா... மகமாயீ உனக்கு எங்க மேல இரக்கமே இல்லையா?"



"அம்மா.... நீ அழுத காலமெல்லாம் போதும். அந்த மகமாயீ ஒன்னும் நம்மள கைவிடல. இனி இந்த வீட்டுல ஒரு நிமிஷம் கூட இருக்க வேண்டாம். வாழ்நாள் முழுக்க நான் உன்னை காப்பாத்துறேன்."



"எனக்கு அரசங்காத்துல வேலை கிடைச்சிருக்கும்மா. இதுக்காகத் தான் நான் இத்தனை நாளாகப் பொறுமையா இருந்தேன்."



"என்ன இன்பா சொல்லுற?"



"ஒரு நாளு நான் டீச்சரோட பட்டணத்துக்கு போயிட்டு வந்திர்றேனு சொன்னேன்ல. அது பரீட்சை எழுதத்தான்." என்றதும் வேகமாக பாரதி டீச்சரின் காலில் விழுந்து வணங்கினார் பார்வதி அம்மா.



"பார்வதி... என்ன பண்றீங்க? எழுந்திருங்க முதல்ல..."




"இல்ல டீச்சர். நீங்க மட்டுமில்லனா இன்பாவுக்கு இந்த வேலைக் கிடைச்சிருக்காது."



அப்படி கிடையாதுங்க பார்வதி. உங்க பொண்ணு ஆர்வமும், வைராக்கியமும் தான் இதுக்கெல்லாம் காரணம். நாளைக்கே நாம பட்டணத்துக்குப் போலாம். எதைப்பத்தியும் யோசிக்காதீங்க! இனி எல்லாமே இன்பாவுக்கு நல்லதாவே அமையும்."



"அம்மா... ஒரு நிமிஷம் உங்கக்கிட்ட பேசனும்" என்று மலர்விழியின் அருகே சென்றாள் இன்பா.



"ஏம்மா... தப்பா நினைக்காதீங்க! உங்க பொண்ணுக்கு பாக்குற மாப்பிளை உங்க பையன மாதிரி இருந்தா, சம்மதம் சொல்வீங்களாம்மா? ஏற்கனவே ஒரு பொண்ணை விரும்புறாங்கனு தெரிஞ்சே என்னைய பொண்ணு பார்க்க உங்களால எப்படி முடிஞ்சதும்மா?



ஒரு பொண்ணே சக பொண்ணோட நிலைமைய புரிஞ்சிக்காம, இப்படி சுயநலமா இருக்கறத பார்த்து எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்குது. நாங்க கிராமத்துல வளர்ந்தாலும் எங்களுக்கும் உங்களை மாதிரி எல்லா உணர்வும் இருக்குதும்மா."




"என்னை மன்னிச்சிரும்மா.... என் பிள்ளைங்க கஷ்டப்படக் கூடாதுனு நான் செல்லம் கொடுத்து வளர்த்தேனே ஒழிய, ஒரு பொண்ணை எப்படி மதிக்கனும் சொல்லிக் கொடுக்காம விட்டுடேன்ம்மா.



ரங்கநாதன் குறுக்கிட்டு, "எங்கள எல்லாரும் மன்னிச்சிருங்க. ஒரு பையன சரியா வளர்க்கத் தெரியாம, நான் எவ்வளவு பெரிய முட்டாள் தனம் பண்ணிட்டேனு இப்போ தான்  எனக்குப் புரியுது. என்று கூறிவிட்டு அழுது கொண்டே அங்கிருந்து அனைவரும் விடை பெற்றனர்.



கிராம மக்களும் ஒருத்தருக்கொருத்தர் அங்கு நடந்த நிகழ்வுகளைக் குறித்து முணுமுணுத்துக் கொண்டே கலைந்து சென்றனர்.




தன் தந்தையை நோக்கி, "ஒரு பொம்பளையால பெருசா என்ன செய்ய முடியும்னு கேட்டீங்க இல்ல? நான் என்னவாக முடியும்னு சாதிச்சு வாழ்ந்து காட்டுறேன்" என்று கூறியவள், தன் வீட்டு முற்றத்தின் ஓரத்தில் கட்டியிருக்கும் பசு, கன்றுக் குட்டியிடம் சென்று தன் அன்பை பரிமாறிக் கொண்டாள்.


    


இத்தனை ஆண்டுகாலமாக வாழ்ந்த சிறையிலிருந்து கிளம்பி சுதந்திரமாக தனக்கான அடையாளத்தை நோக்கி தன் தாயையும் அழைத்துக் கொண்டு சிறகடித்து பறந்து பட்டணத்திற்குச் சென்றாள் இன்பா.



இன்பா நினைத்தப்படி, அவளுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்தது. தன் தாயுடன் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து தன்னைப் போல பெண்களை அடிமையாக எண்ணும் மக்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு, அவர்கள் தன் சொந்தகாலில் நிற்பதற்கான வழியையும் வகுத்துக் கொடுத்தாள்.





"பெண்கள் நினைத்தால் எதையும் வெல்லலாம்" என்ற மந்திரச் சொல்லை உரக்கக் கூறியதோடு, அதன்படி வாழ்ந்தும் காட்டியதோடுஒவ்வொரு கிராமத்துப் பெண்களுக்கும் முன் மாதிரியாக திகழ்ந்தாள் இன்பா.



சுபம்.


 

Post a Comment

0Comments
Post a Comment (0)