பெற்ற
வயிறு கலங்கியது. உள்ளே விசும்பல் ஒலி கேட்டுக் கொண்டிருக்கிறதா என்று அவ்வப்போது
கதவில் காதை வைத்து உன்னிப்பாகக் கவனித்தது அந்தத் தாயுள்ளம்.
இருக்காதா
பின்னே... பத்து
மாதம் சுமந்து பெற்றெடுத்து, சீராட்டி வளர்த்த செல்ல மகள் மலர்விழி,
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வரவில்லை
என்பதற்காக மனமுடைந்து போய் அறைக்குள் அழுது கொண்டிருக்கிறாள். மலர்விழி
அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்ட போதே பதறிப் போனார் பார்வதி.
செய்திகளில் அடிக்கடி கேள்விப்படும் நிறைய தற்கொலைச்
சம்பவங்களின் பாதிப்பு அந்தத் தாய்க்கும் இருக்காதா என்ன?
சுமார் ஒரு மணி
நேரமாக இந்தப் போராட்டம் தொடர்கிறது. உள்ளிருந்து வரும் விசும்பல் ஒலியில்
தன் நம்பிக்கையைக் கெட்டியாப்
பிடித்துக் கொண்டு, அறை
வாசலிலேயே காத்துக் கிடந்தார் பார்வதி. ஒரு நொடி விசும்பல் கேட்கவில்லை
என்றாலும்,
மனதில் பலவிதமான கற்பனைகள் எட்டிப் பார்த்து பயமுறுத்தின.
“மலர்... மலரு, தயவு
செஞ்சு கதவைத் திற. அம்மா அவ்வளவு நேரமா
கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன். நீ இப்படி அழறதால மட்டும் என்ன மாறிடப் போகுது?”
“நான் தோத்துட்டேன் மா... நான் தோத்துட்டேன். பரீட்சைல நல்ல மார்க் வாங்கினாத்தானே
நல்ல காலேஜ்ல இடம் கிடைக்கும். என்னோட கனவு அப்பதானே நிறைவேறும்.”
“உன் வேதனை புரியுது மலர். கதவைத்
திற, என்ன
பேசணுமோ என்கிட்ட எல்லாம் சொல்லு. உன்னை அழ வேண்டாம்னு சொல்லல,
வருத்தப்பட வேண்டாம்னு சொல்லல. இப்படி கதவைச் சாத்திட்டு என்னை வெளில தவிக்க
விடறியே, நான்
என்னடி பண்ணுவேன்?”
சற்று
நேரத்தில் அறைக் கதவு திறந்ததும், தாவி வந்து தன் தாயைக் கட்டிக் கொண்டாள்
மலர்விழி.
“மலரு... இதப் பாரு, இப்ப என்ன நடந்துபோச்சுன்னு இப்படி அழறே?”
“என்னம்மா, என்னைப்
பத்தி நல்லாத் தெரிஞ்சும் இப்படிக் கேட்கறீங்களே.”
“தெரிஞ்சதாலத் தான் கேட்கறேன். மலர், இப்போ நீ எழுதுன பரீட்சையும், அதுல
வந்த மதிப்பெண்களும் தான் உன் வாழ்க்கையை நிர்ணயிக்குமா? அது
மட்டும்தான் வாழ்க்கையா?”
“ஆமாம்மா, பரீட்சை தானே முக்கியம்.”
“உண்மையான பரீட்சை எது தெரியுமா மலரு? இந்தச்
சூழ்நிலையை நீ எப்படிக் கையாண்டு, அதிலிருந்து எப்படி மீண்டு வரப்போறேங்கறது தான்
உனக்கு வைக்கப்பட்ட உண்மையான பரீட்சை. அதுல
நீ ஜெயிக்கணும். அப்பதான் நீ வாழ்க்கைல ஜெயிக்க முடியும். எவ்வளவு வயசானாலும் வாழ்க்கைல இதுமாதிரி பரீட்சை
வந்துகிட்டே தான் இருக்கும். ஒவ்வொரு பரீட்சையையும் நீ தைரியமாக் கடந்து வந்தாதான், உன் வாழ்க்கை சந்தோஷமா,
பூரணமா கடைசி வரைக்கும் இருக்கும்.”
நம்பிக்கையுடன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் மலர்.
- ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை