அக்கரைப் பச்சை | ஸ்ரீவித்யா பசுபதி


உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. இன்று ஏனோ இளநீர் வியாபாரம் சரியாகவே போகவில்லை. 

அருகே இருந்த கட்டடத்தின் நிழலில் ஒதுங்கிக் கொண்டு, எதிரிலிருந்த ஐஸ்கிரீம் கடையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் குமரேசன்.


ஒரு நாளாவது ஐஸ்கிரீம் கடையில் உட்கார்ந்து, சின்னதாக ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று ஆசைதான். ஆனால் இந்த இளநீர் வியாபாரத்தில் தினமும் என்னதான் இளநீர் விற்றுத் தீர்ந்தாலும், முதலாளி அவர் பங்கைப் பிடித்துக் கொண்டு தரும் மீதி வருமானம் வீட்டுச் செலவுக்கு சரியாக இருக்கிறது. 


அதுவும் எல்லா இளநீர்களும் விற்றால்தான் கையில் கொஞ்சமாவது பணம் மிஞ்சும்.


வசதியும் வாய்ப்பும் தனக்கு அமையவில்லையே என்ற ஏக்கம் அவன் மனதை வெயிலோடு சேர்ந்து வாட்டிக் கொண்டுதான் இருந்தது.


சற்று நேரத்தில் ஐஸ்கிரீம் கடையை நடத்தும் செந்தில் நேராக குமரேசனின் இளநீர் வண்டியை நோக்கி வந்தான்.


"அண்ணே, வெறும் தண்ணியா ஒரு இளநீ குடுங்க.” இளநீரை சீவிக் கொண்டே செந்திலிடம் கேட்டான் குமரேசன்.


“அண்ணே, கேக்கறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நல்லா குளுகுளுன்னு உங்க கடையிருக்கு. அதைவிட குளுகுளுன்னு ஐஸ்கிரீம் இருக்கு. நீங்க எதுக்கு இப்படி வெயில்ல வந்து நின்னு இளநீ குடிக்கறீங்க? நீங்க கொடுத்து வச்சவங்க அண்ணே.”


“அங்கதான் நீங்க தப்பு பண்றீங்க. நீங்கதான் கொடுத்து வச்சவங்க. நான் எப்பவும் ஏசி ரூம்ல இருக்கறதால கைகால் எலும்பெல்லாம் வலி எடுக்குது. வெயில்ல நில்லுனு டாக்டர் திட்றாரு.


அப்புறம் நீங்க நினைக்கற மாதிரி அந்த ஐஸ்கிரீம் எல்லாம் தினமும் சாப்பிட முடியாதுங்க. சூடுதான் அதிகமாகுது. இளநீர் மாதிரி வருமா? ஒரு இளநீர் குடிச்சாலும் அவ்வளவு குளிர்ச்சி.”


குமரேசன் செந்திலை ஆச்சரியமாகப் பார்த்தான். ஏனோ குமரேசனுக்குத் திடீரென இளநீர் மேல் அதீத ஆசை எட்டிப் பார்த்தது .


- ஸ்ரீவித்யா பசுபதி சென்னை 

Post a Comment

0Comments
Post a Comment (0)