மல்லிகையும் அவனும்... | கவிஞர். நீலாம்பரி



மல்லிகையும் அவனும்...

காலையும் மாலையும் மட்டுமே
கலகலவென வியாபாரம்
களை கட்டும்...

வெயிலோ மழையோ,
கிழவி பாதுகாத்தபடியே
கிடப்பாள் பூக்களை...

மட்ட மதியம் யாரெல்லாம்
பட்டம் கட்டிக்கிட்டு வாராக
பூ வாங்க,
பேசாமல் ஓய்வெடு என்பேன்...

"விட்டுட்டு போன உன் புருஷன்
வருவான்னு தான் காத்திருக்கேன்"
வியாக்கியான பேச்சை கேட்டு,
களுக்கென்று சிரித்த என்னை
தடுத்து நிறுத்தினாள் கிழவி...

"புருஷன் விட்டுட்டு போனதிலருந்து
மல்லிப்பூ வைக்கிறதையே
மறந்திட்டியே கண்ணு"...

விசனம் பேசிக்கொண்டே
கூடையில் இருந்து அஞ்சு முழம்
பூவை வைத்து விட்டாள்...

இப்போ பாருடி உன் முகத்தை
எம்புட்டு அழகுன்னு
திருஷ்டி கழித்தாள் கிழவி...

தலையில் வைத்த பூக்களை
தடவி பார்த்து கொண்டேன்...
"ரொம்ப வருஷம் ஆகிடிச்சுடி
நீ பூ வைத்து" என்றாள் கிழவி...

ம்ம்ம்...புருஷன் இல்லாதவளுக்கு
பூ ஆசைய பாருன்னு ஊர் பேசுமேனு
பூவை எடுத்து பையில் வைத்துக்கொண்டேன்...

பூவின் மணமெல்லாம்
அவனையே நினைவுபடுத்திக்
கொண்டே இருந்தது,வாடும் வரை... 


- கவிஞர். நீலாம்பரி, கோவை

Post a Comment

0Comments
Post a Comment (0)