இருளின் திரை. | பா. நீலாம்பரி


இருளிலே இருந்து இருந்து
இருள் பழகி விட்டது...
பெரிய திரை கொண்ட
பெரும் இருளானது...

எல்லா இல்லாமைகளையும்
இல்லாமல் செய்யவில்லை,
மூடி மறைத்து விட்டது...

வெளியில் இருந்து கொண்டு,
இருளில் இருப்பவனை
பார்த்தால்...

அவன் ஏழையா, பணக்காரனா
உடைகள் புதுசா, கிழிந்ததா
பசியா...பல் சுவை விருந்தா
இன்பமா, துன்பமா,
போதுமா போதாதா,
இருக்குதா இல்லையா,
ஒன்றும் தெரியாது...

எல்லாமும்
இருளின் திரையால்
மூடப்பட்டு
மறைந்து உள்ளே கிடக்கிறது...
மாயை போல்
சிறிது நேரம் மட்டுமே
வரும் வெளிச்சமானது
அகத்தின் ஆழத்தையும்
புறத்தின் ஒப்பனையையும்
இல்லாமைகளையும்
இயலாமைகளையும்...
எல்லாவற்றையும்
போட்டு உடைத்து விட்டே
நகர்கிறது , யாரையும் கேட்காமல்...

இப்போதெல்லாம்
வெளிச்சத்தை
பார்த்தால் தான்
பயம் பற்றிக்கொள்கிறது...

- பா. நீலாம்பரி 

Post a Comment

0Comments
Post a Comment (0)