Image Source : Pinterest |
என் நிறம் பிடிக்கவில்லை உங்களுக்கு...
என்பிறப்பு நிறம் மாறுமா???...
நீங்கள் கொடுத்த வர்ணங்களை பூசிக்கொள்கிறேன்...
சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, கருப்பு, தங்க நிறங்கள்...
வெள்ளை நிறத்துக்கு அனுமதி மறுக்கப் படுகிறது...
என் மனம் பால் வெண்மை என்றேன்...
அது கணக்கில் வராது என்றீர்கள்..
என் ரத்தத்தின் பரம்பரை குணங்களெல்லாம்
பகையாய் தெரிகிறது உங்களுக்கு...
எங்கிருந்தோ வந்து பொழிந்த அன்பின் அடைமழை,
முழுதும் என்னை நனைத்தது...
பூசிய வண்ணங்களை எல்லாம் கலைத்து விட்டு,
புன்னகை பூத்து, இதழில் முத்தமிட்டுச் சென்றது...
என் மேனியெங்கும் பிறப்பு நிறமாய்...இதுவே உன் அழகு
மழையின் அசரீரி சிரித்து கொண்டே சொன்னது...
என்னை யாரென்று உணர்த்திச் சென்ற மழைக்காக,
மேலும் மேலும் காத்துக் கொண்டிருக்கிறேன்...
இன்றுவரை திரும்பவில்லை அந்த
அன்பின் மாமழை ...
அழாமல் என் செய்வேனடா
அழாமல் என் செய்வேனடா,
காத்திருந்த கணங்கள் எல்லாம்
கைக்கூடும்போது...
விழியில் நுழைந்து காதல் பேசினாய்
இதயம் வந்து வசந்தம் தந்தாய்
நீயின்றி நானில்லை என்றாக்கினாய்
என் பாதையில் பூக்கள் நிரப்பினாய்
பாதங்களை உன் கைகளில் ஏந்தினாய்
கனவுகளை உன் வசமாக்கி கொண்டாய்
உயரத்தில் வைத்தே அழகு பார்த்தாய்
ஊரறிய கரம் பிடித்தே காதலை
உரைத்தாய் என் தலைவா...
அழாமல் என் செய்வேனடா
காத்திருந்த கணங்கள் எல்லாம்
கை கூடும்போது ...
என்ன செய்கிறாய் என்னை...
என் எண்ணங்களையும்
சிந்தனைகளையும்
உன் கட்டுப்பாட்டில்
கொண்டு வருகிறாய்...
பேச்சும் செயலும்
அனைத்தும் உன்னை நோக்கியே...
வார்த்தைகளும் எழுத்தும்
உன் உருவிலே...
என்ன செய்கிறாயடா என்னை
ஆழ் மனதில் பதிந்து
ஆட்சி செய்கிறாய் தலைவா ...
- கவிஞர் நீலாம்பரி, கோவை.