கோத்தகிரி, மே.13:
ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாதாந்திர செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் தலைவர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொருளாளர் மரியம்மா, துணை தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி, இணை செயலாளர் வினோபா பாப், ஆலோசகர் பிரவின் மற்றும் கௌரவ தலைவர் ஜம்புலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் செயலாளர் முகமது சலீம் கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். முன்னதாக செயற்குழு உறுப்பினர் விபின் குமார் வரவேற்புரை வழங்கினார். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, வரும் ஜூன் மாதத்தில் அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் சமவெளி பகுதிகளை விட குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால், 45 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படுவது மலைப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே, மலை மாவட்ட மக்களின் தேவையை கருத்தில் கொண்டு 30 நாட்களுக்கு ஒரு முறை எரிவாயு சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று Narendra Modi மற்றும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் Hardeep Singh Puri ஆகியோருக்கு மீண்டும் நினைவூட்டும் வகையில் கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
அதேபோல், நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் முறையாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட தாந்தநாடு பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அம்ரூத் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அமைப்பின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் திரைசா, லலிதா சிவன், ஏசுராணி, விஜயா, விபின் குமார், டானிங்டன் சுரேஸ் மற்றும் உறுப்பினர்கள் தமிழ் செல்வி, கிரேஸி சார்லஸ், விக்டோரியா, நிசார் தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆலோசகர் பிரவின் நன்றி கூறினார்.

.jpg)