நீலகிரி, மே.07:
அன்னை இந்திரா நகர் பகுதியில் கரடிகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக நள்ளிரவு 12 மணி அளவில் வனவிலங்குகள் வீடுகள் அருகே வருவதால் மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை வனத்துறை அதிகாரிகளிடம் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும், எழுத்து மூலமாகவும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதுவரை எந்தவித நிரந்தர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் டார்ச் லைட் அடித்து பார்வையிட்டு மீண்டும் திரும்பிச் சென்றதாகவும், இதுவே வனத்துறையின் நடவடிக்கையா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். “பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு முக்கியமல்லவா? உயிர் சேதம் ஏற்பட்ட பிறகுதானா அதிகாரிகள் விழித்துக்கொள்வார்கள்?” என்று மக்கள் ஆவேசமாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க கூண்டு அமைத்தல், இரவு நேர வனத்துறை ரோந்து அதிகரித்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் மற்றும் உடனடி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கும் வனத்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.jpg)